உலகில் அதிகம் பேரை பாதிக்கும் முக்கியமான உயிரினம் கொசு. கொசுவின் பல வகைகளும் ஏற்படுத்தும் நோய்கள் ஏராளம். கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற பல நோய்கள் பரவுகின்றன. கொசுக்களால் ஏற்படும் இறப்புகள் ஆண்டுதோறும் 700,000-க்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகின் மிக கொடிய விலங்குகளில் ஒன்றாக கொசுக்களை ஆக்குகிறது.
அப்படிப்பட்ட கொசுக்களே இல்லாமல் இருந்த இடங்கள் இரண்டே இரண்டுதான். தற்போது கொசுவே இல்லாத ஒரு இடத்திலும் நுழைந்துவிட்டது இந்த உயிரினம். இதன் பின்னணியில் உள்ள காரணம் ஆய்வாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் கொசுக்கள் இல்லாத இரு பகுதிகளில் ஒன்று ஐஸ்லாந்து மற்றொன்று அண்டார்டிகா. காரணம் இங்கு நிலவும் அதீத குளிர். அந்த அளவு குளிரில் கொசுக்களால் வாழ முடியாது. ஆனால் பூச்சிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளரான பியான் ஹால்டசன், ஐஸ்லாந்தில் கடந்த வாரத்தில் மூன்று கொசுக்களை கண்டுபிடித்துள்ளார்.
ஐஸ்லாந்து தலைநகர் ரேக்கா விக்கின் தென்மேற்கு பகுதியில் பணி பள்ளத்தாக்கில் இந்த கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு பெண் கொசுக்கள் ஒன்று ஆண் கொசு. இந்த கொசுக்கள் குலிசேட்டா அனுலேட்டா வகையை சேர்ந்த கொசுக்கள் என அறியப்பட்டுள்ளன. இந்த வகை கொசுக்கள்தான் கடும் குளிரிலும் வாழக்கூடியவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த கொசுக்களை இதற்கு முன்பு ஐஸ்லாந்தில் பார்த்ததே இல்லை என்கிறார் ஹால்டர்சன். இக்கொசுக்களை ஐஸ்லாந்து தேசிய இயற்கை வரலாற்று ஆய்வு கழகத்திற்கு ஹால்டசன் அனுப்பி வைத்தபோது அவர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.
இதையும் படிங்க: “ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செஞ்சும் எல்லாம் போச்சே”... கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்...!
இந்த வகை கொசுக்கள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படக்கூடியவை. ஆனால் இவை எப்படி ஐஸ்லாந்தை வந்தடைந்தன என்று புரியவில்லை என ஹால்டசன் தெரிவித்துள்ளார். ஐஸ்லாந்தின் கடும் குளிரான சூழல் மற்றும் அங்கு தண்ணீர் தேங்குவது இல்லை என்பதால் கொசுக்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் அங்கு கிடையவே கிடையாது. ஆனால் இந்த ஆண்டு அதிக முறை ஐஸ்லாந்தில் அதிக வெப்பநிலை பதிவானது. மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக 20கிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது.
ஐஸ்லாந்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவாக 10 நாட்கள் தொடர்ந்து அதிக வெப்பம் பதிவானது. கொசுக்கள் கண்டறியப்பட்ட இடம் கப்பல் கண்டெனர்கள் வரக்கூடிய இடத்திற்கு 6 கிலோமீட்டர் தொலைவே என்பதால் அந்த வகையில் கொசுக்கள் ஐஸ்லாந்திற்கு வந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இதையும் படிங்க: “ஆம்பளையா இருந்தா வாடா” - பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு சவால் விட்ட தாலிபான்கள்...!