எங்களின் பூமியை எந்த தேசத்துக்கும் எதிராகவும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் காலூன்றி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டோம் என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், ஆக்கிமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை அழித்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று இந்திய எல்லைப்பகுதிகளில் விமானத் தாக்குதல் நடத்தியது இந்தியாவும் பதிலடியில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பாக்.-ன் ‘பொய்யான பரப்புரை’க்கு பலியாகாதீர்கள்.. நெட்டிசன்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!
இலங்கையும், சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகள் என்பதால், இலங்கையைப் பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என்ற பேச்சு எழுந்தது. அதேசமயம், இலங்கையும், இந்தியாவும் நீண்டகால நட்பு நாடுகள் என்பதால் இலங்கை அவ்வாறு செயல்படாது என்ற கருத்தும் இருந்தது. இந்நிலையில் இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் நலிந்தா ஜெயதிசா நேற்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது:
இலங்கையைப் பொருத்தவரை இந்தியப் பெருங்கடலில் நிலவும் புவி அரசியல் முரண்பாடு, மோதலில் இருந்து தனித்து நிற்கவே விரும்புகிறது. எங்களின் எல்லைப்பகுதி, நிலம், கடற்பகுதி, வான்வெளி ஆகியவற்றை எந்த நாட்டுக்கும் விட்டுக்கொடுத்து மற்றொரு நாட்டை தாக்க அனுமதிக்கமாட்டோம். எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை முன்கூட்டியே தெரிவித்துள்ளோம். ஆசியக் கண்டத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிப்பதுதான், பிராந்தியத்தில் நிலைத்தன்மையும், அமைதியும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் விரும்புகிறோம்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுடன் இலங்கை நல்ல நட்புறவையும், தூதரக உறவையும் கொண்டுள்ளது. அவ்வப்போதும், இக்கட்டான நேரத்திலும் இலங்கைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தேவையான உதவிகளை செய்துள்ளன. எங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்து நாங்கள் தனித்து செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் குமாரா திசநாயகே எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட செய்தி எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைப்பேசியில் பேசி எனது வருதத்த்தையும், கண்டனத்தையும் தெரிவித்தேன், தீவிரவாதத்தை ஒழிப்பதில் எங்களின் கடப்பாட்டையும் தெரிவித்தோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசு சார்பில் ஆறுதல்களை தெரிவிக்கிறோம். இந்தக் கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு துணைநிற்போம்” எனத் தெரிவித்தார்.

தெற்காசியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பு விடுத்த கோரிக்கையில் “ இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் உடனடியாக போரைக் கைவிட்டு, பிராந்தியத்தில் அமைதி நிலவ வைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இரு நாட்டு மக்களையும் தெற்காசிய மக்களையும் மீளமுடியாத அளவிற்கு பாதிக்கும். இந்தியா எல்லைக் கடந்து பாகிஸ்தான் பகுதியில் 9 இடங்களில் தாக்குதல் நடத்தியை நாங்கள் கண்டிக்கிறோம்.
அதேநேரம், பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு நம்பகத்தன்மையான, வெளிப்படையான விசாரணை தேவை. இந்தியா, பாகிஸ்தான் மக்கள் எந்தவொரு போர் தூண்டுதலையும் தவிர்க்க வேண்டும். இரு தரப்பிலும் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு இருநாடுகளின் அரசாங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இருக்கும் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்..! முப்படை தளபதிகளுடன் ஆலோசிக்கும் ராஜ்நாத் சிங்..!