காரகஸ், ஜனவரி 6: வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், 2025ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அந்தப் பரிசை பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்து நாடு கடத்திய சம்பவத்தை “வரலாற்று மைல்கல்” என்று புகழ்ந்த அவர், டிரம்ப் இதற்கு முழுத் தகுதியானவர் என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்டகாலமாக வெனிசுவேலாவில் இருந்து போதைப்பொருள்கள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி வந்தார். இதற்காக போதைப்பொருள் கடத்தும் கப்பல்களை தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜனவரி 3ஆம் தேதி அதிகாலையில் அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் (69) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ரெண்டு ஹீரோக்களை கடத்தியிருக்கீங்க! மக்கள் துக்கத்துல இருக்காங்க! வெனிசுலா இடைக்கால அதிபர் காட்டம்!
இருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு, நியூயார்க் நீதிமன்றத்தில் ஜனவரி 5ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் இதை சர்வதேச சட்ட மீறல் என்று கண்டித்துள்ளன.

மதுரோ கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரியா கொரினா மச்சாடோ “சுதந்திரத்துக்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறினார். அவர் அதிபர் பதவியை ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப் “மச்சாடோவுக்கு உள்நாட்டில் போதிய ஆதரவு இல்லை” என்று கூறியது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதுகுறித்து மச்சாடோ பேசுகையில், “எனக்கு நோபல் பரிசு கிடைத்தபோது அதை டிரம்புக்கு அர்ப்பணித்தேன். அவர் அதற்கு தகுதியானவர். ஜனவரி 3ஆம் தேதி நடவடிக்கை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் உலகுக்கு தனது தகுதியை நிரூபித்துவிட்டார்.
கொடுங்கோல் ஆட்சியை முடித்த இந்த நாள் வரலாற்றில் இடம்பெறும். இது வெனிசுவேலா மக்களுக்கு மட்டுமல்ல, மொத்த மனித குலத்துக்குமான சாதனை” என்றார். மேலும், நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மச்சாடோ 2025ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசை வெனிசுவேலாவில் ஜனநாயகத்துக்காக போராடியதற்காக பெற்றார். அப்போது அதை டிரம்புக்கு அர்ப்பணித்திருந்தார். இச்சம்பவம் வெனிசுவேலாவில் புதிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல லத்தீன் அமெரிக்க நாடுகள் இதை இறையாண்மை மீறல் என்று கண்டித்துள்ளன.
இதையும் படிங்க: வெனிசுலாவை தாக்க போதைப்பொருள் காரணமில்லை! அமெரிக்காவின் சீக்ரெட் ப்ளான்!! கொட்டிக்கிடக்கும் வளம்!