இஸ்லாமாபாத், டிசம்பர் 13: பாகிஸ்தானில் தற்போது உள்ள நான்கு மாகாணங்களை ஒவ்வொன்றும் மூன்றாக பிரித்து மொத்தம் 12 சிறிய மாகாணங்களாக உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதை பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சரும் இஸ்தெகாம்-இ-பாகிஸ்தான் கட்சித் தலைவருமான அப்துல் அலீம் கான் உறுதி செய்துள்ளார். நிர்வாக வசதி மற்றும் மக்களின் குறைகளை விரைவாக தீர்க்க இந்த மாற்றம் தேவை என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போது பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா, பலூசிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்கள் உள்ளன. 1947ல் சுதந்திரம் பெற்றபோது ஐந்து மாகாணங்கள் இருந்தன. 1971ல் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக பிரிந்தது.
இதையும் படிங்க: அரஸ்ட் பண்ணி 845 நாளாச்சு!! ஜெயில்ல வச்சி எங்கப்பாவை கொன்னுட்டாங்க! கதறும் இம்ரான்கான் மகன்!
தற்போது பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் போராட்டங்கள் தீவிரமாக உள்ளன. சிலர் தனி நாடு கோருகின்றனர். இந்த சூழலில் சிறிய மாகாணங்கள் உருவாக்கப்பட்டால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அமைச்சர் அப்துல் அலீம் கான் கூறுகையில், “சிறிய மாகாணங்கள் உருவாக்கப்படுவது உறுதி. இதனால் மக்களுக்கு அதிக பிரதிநிதிகள் கிடைப்பார்கள். குறைகள் விரைவில் தீர்க்கப்படும். அண்டை நாடுகளில் பல சிறிய மாகாணங்கள் உள்ளன” என்றார்.

திட்டப்படி, பஞ்சாப் வடக்கு, மத்திய, தெற்கு பஞ்சாப் என பிரிக்கப்படும். சிந்து கராச்சி சிந்து, மத்திய சிந்து, அப்பர் சிந்து எனவும், கைபர் பக்துன்க்வா வடக்கு, தெற்கு, பழங்குடி பகுதிகள் எனவும் பிரிக்கப்படும். பலூசிஸ்தானும் இதேபோல் பிரிக்கப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அரசின் கூட்டணிக் கட்சியான இஸ்தெகாம்-இ-பாகிஸ்தான் கட்சி இந்த திட்டத்தை வலுவாக ஆதரிக்கிறது. ஆனால், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) சிந்து மாகாணத்தை பிரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிந்து முதல்வர் முராத் அலி ஷா, “சிந்தை பிரிக்கும் எந்த முயற்சியையும் ஏற்க மாட்டோம்” என்று எச்சரித்தார்.
சர்வதேச அரசியல் நிபுணர்கள் இந்த திட்டத்தை “பிரித்தாளும் சூழ்ச்சி” என்று விமர்சிக்கின்றனர். ஏற்கனவே போராட்டங்கள் உள்ள நிலையில், இது புதிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். உள்ளார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் மாகாணங்களை பிரிப்பது உதவாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானில் புதிய மாகாணங்கள் உருவாக்கும் முயற்சி பலமுறை வந்துள்ளது. ஆனால் இம்முறை நிறைவேறுமா என்று பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: இம்ரான் கானுக்கு என்னாச்சு? சந்திக்க அனுமதி மறுப்பு! உயிரோடவாச்சும் வச்சிருக்கீங்களா? ஆதரவாளர்கள் சந்தேகம்!