எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு காலி செய்து வருகின்றனர்.

ஏப். 22இல் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதிலடி கொடுப்பதற்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனால், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி சென்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
.
மேலும், இந்திய போர் விமானங்கள் அரபிக் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டன. பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்துகொண்ட பாகிஸ்தான் ராணுவமும் எல்லையில் போர் விமானங்களை குவித்துள்ளது.

இதற்கிடையே இந்திய எல்லையில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து நாசவேலைகளில் ஈடுப்டடு வந்தனர். அங்கு தீவிரவாதிகள் பல நவீன முகாம்களை நடத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முகாம்களில் இருந்துதான், இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்துவதை அவர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், அந்த முகாம்கள் அனைத்தையும் தற்போது இந்திய ராணுவம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், அந்தப் பயிற்சி முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் எந்த நேரத்திலும் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற பீதி தீவிரவாதிகளிடம் நிலவுகிறது.
இதையும் படிங்க: அடுத்த அடி.. பாகிஸ்தான் தபால்கள், பார்சல்களுக்கு தடை.. கேப் விடாமல் நொறுக்கும் இந்தியா!!

இதனால் கடந்த சில தினங்களாக தீவிரவாதிகள் எல்லை பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். மேலும், அங்கு செயல்பட்டு வந்த, பெரும்பாலான தீவிரவாத பயிற்சி முகாம்கள் பயத்தில் மூடப்பட்டுள்ளன. பதுங்கு குழிகளையும் கைவிட்டு விட்டு தீவிரவாதிகள் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இதுதொடர்பான தகவல்கலை, இந்திய உளவுத்துறை சேகரித்து, தீவிரவாதிகளின் இடம்பெயர் நிகழ்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி(பிஓகே) அருகே ஜம்மு டிவிஷன் பகுதியில் 3 இடங்களில் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வந்தனர். அந்த முகாம்களில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்ததாகத் தெரிகிறது. எல்லையில் நீடிக்கும் பதற்றம் காரணமான அந்த முகாம்களை மூடி விட்டு தீவிரவாதிகள் கூட்டம் கூட்டமாக சென்றதை இந்திய ராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தயாராகும் அடுத்த ஆப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியாவின் மாஸ் பிளான்.!