கானா, டிரினிடாட்–டொபாகோ , அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி, 1 வாரகாலம் அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கானா நாட்டு பயணத்தை முடித்து விட்டு இன்று கரீபியன் தீவு நாடான டிரினிடாட்–டொபாகோ குடியரசு நாட்டுக்கு சென்றார். அங்கு பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசர், வாழை இலையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார்.
இலையில் பரிமாறுவது, டிரினிடாட்–டொபாகோ மக்களுக்கு குறிப்பாக இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் இலையில் உணவு பரிமாறப்படுகிறது என மோடி தெரிவித்துள்ளார்.

டிரினிடாட்–டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத்துக்கு, அயோத்தி ராமர் கோயில் மாதிரி, சரயு நதி புனித நீர் மற்றும் கும்பமேளா புனித நீர் ஆகியவற்றை பிரதமர் மோடி பரிசளித்தார். இந்த பரிசுகள் இரு நாடுகள் இடையேயான ஆழமான கலாச்சாரம் மற்றும் ஆன்மிக பிணைப்புகளை அடையாளப்படுத்துகிறது என மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷேக் ஹசினாவை தொடரும் சிக்கல்! சிறைவாசம்..! நாடு கடத்த தீவிரம் காட்டும் வங்கதேசம்.!
அந்த நாட்டின் உயரிய விருதான 'Order of the Republic of Trinidad and Tobago' விருதை அந்நாட்டு அதிபர் கிறிஸ்டின் கங்காநு Christine Kangaloo பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடிதான். 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த விருதை பெற்றுக்கொள்வதாகவும், இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை ஆழப்படுத்தும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். டிரினிடாட்–டொபாகோ பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த இரு நாடுகளும் காலனித்துவ ஆட்சியின் நிழலில் இருந்து எழுந்து முன்னேற்றம் அடைந்தவை. நமது நாடுகள் நவீன உலகின் பெருமைமிக்க ஜனநாயக நாடுகளாகவும், வலிமையின் தூண்களாகவும் உயர்ந்து நிற்கின்றன எனக்கூறினார். 1968ல் இந்தியாவால் அந்நாட்டுக்கு பரிசாக வழங்கப்பட்ட சபாநாயகர் இருக்கை பற்றி மோடி பேசும்போது, இங்குள்ள சபாநாயகர் இருக்கையில், இந்தியா மக்களிடம் இருந்து டிரினிடாட்–டொபாகோ மக்களிடம் இருந்து என்று எழுதப்பட்டு இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அது இரு நாடுகளுக்கு இடையோன நட்பின் சக்திவாய்ந்த சின்னமாக இருக்கிறது என மோடி குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் இயற்கையான அரவணைப்பு, அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்கிறது. இந்தியாவை போலவே, இங்கும் அரசியல் மற்றும் பிற துறைகளில் பெண்களின் பங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் நின்றதற்காக கரீபியன் மக்களுக்கும் அரசுக்கும் நன்றி. உலகளவில் தெற்கிற்கு உயர்ந்த இடத்தில் சரியான இடம் வழங்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக கவாய் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர், மோடி எழுதிய குஜராத்தி கவிதையிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 'ஆங்க் ஆ தன்யா சே' (இந்த கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை) என்ற புத்தகத்தின் கவிதையை அவர் குறிப்பிட்டார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: டிரினிடாட் பிரதமர் கம்லாவின் முன்னோர்கள் பிஹார் மாநிலத்தின் பக்சார் மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். அவர் பிஹார் மாநிலத்தின் மகள். கம்லாகூட ஒருமுறை தனது சொந்த கிராமத்துக்கு வந்து சென்றுள்ளார். அங்குள்ள மக்கள் அவரை தங்களது மகளாக பார்க்கின்றனர் என்றார்.
இதையும் படிங்க: இந்திய வம்சாவளியினர் அனைவரும் கலாச்சார தூதர்கள்..! உள்ளம் நெகிழ்ந்த மோடி.. கிஃப்டில் வைத்த ட்விஸ்ட்..!