காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

மேலும் இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக இந்தியா மீது கடந்த வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்தது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய ட்ரோன்களை இதுனாலதான் நாங்க சுடவில்லை... பாக். அமைச்சரின் பகீர் விளக்கம்!!

பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. 50க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் தற்போது அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முப்படைகளில் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் முன்னாள் தளபதிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நீண்ட நேரம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - பாக். பதற்றம்; இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. டிவி சேனல்களுக்கு அதிரடி உத்தரவு!!