ஐரோப்பிய நாடுகளின் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி செல்ல உள்ளார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த 6 நாள் பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்குச் சென்ற பிரதமர் மோடி, அடுத்ததாக நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சென்று முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டார். ஸ்வீடன் பயணத்தின்போது அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனை சந்தித்த பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நார்வே சென்றடைந்த பிரதமருக்கு அந்நாட்டின் உயிரிய விருது வழங்கப்பட்டது. ஓஸ்லோவில் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவை சந்தித்த மோடி, ஆராய்ச்சி, கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசினார்.
இதையும் படிங்க: ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!

இத்தாலி பயணம் இந்த சுற்றுப்பயணத்தின் நிறைவு கட்டமாக அமைய உள்ளது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் நடைபெறும் சந்திப்பில் வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பசுமை எரிசக்தி மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்றுப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வட ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாலியில் நடைபெறும் சந்திப்புகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார். இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா தனது உலகளாவிய கூட்டாளிகளுடன் வலுவான உறவுகளை வளர்த்துக்கொள்ளும் என அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!