மேற்காசிய நாடான ஈரான்-அமெரிக்கா இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கான வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக ஏமன் கடற்கரையை ஒட்டியுள்ள பாப் அல் மாண்டேப் ஜலசந்தி வழியாக சவுதி அரேபியா கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
ஏமனில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து, பாப் அல் மாண்டேப் ஜலசந்தி ஹவுதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆசியப் பிராந்தியத்துக்கான எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சிங்கப்பூரின் ஜூரோங் தீவில் நிலத்துக்கு அடியில் 492 அடி ஆழத்தில் அமைந்துள்ள பாறை குகைகளில் சேமித்து வைக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
இங்கு 14.7 லட்சம் கன மீட்டர் அல்லது சுமார் 90 லட்சம் பீப்பாய்கள் அளவுக்கு திரவ ஹைட்ரோகார்பன்களைச் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவுடனான ஒப்பந்தந்தை நிராகரித்தால் மிகப்பெரிய தாக்குதல் நடக்கும்! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச எரிசக்தி வார நிகழ்வில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம், சிங்கப்பூரின் எரிசக்தி சந்தை ஆணையம் மற்றும் ஜே.டி.சி. கார்ப்பரேஷன் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
ஒப்பந்தத்தின்படி சேமிப்புப் பணிகள் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அராம்கோ நிறுவனம் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இதுபோன்று கச்சா எண்ணெயைச் சேமித்து வைத்துள்ளது. எதிர்பாராத பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அங்குள்ள உள்ளூர் அரசுக்குச் சேமிப்பில் உள்ள கையிருப்பை முன்னுரிமை அடிப்படையில் வழங்கி வருகிறது.
இந்த ஏற்பாடு தென்கிழக்கு ஆசியாவில் சவுதி கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் எனவும் சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் எனவும் இரு நாட்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!