துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற பிளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்தை தடுத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்மித்தை இந்தியா, இஸ்ரேல் மட்டுமின்றி உலகத்தின் ஹீரோ என்று பாராட்டிய நெதன்யாகு, அடுத்த ஆண்டு நடைபெறும் இஸ்ரேல் சுதந்திர தின நிகழ்ச்சியில் அவரும் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று தீப்பந்தம் ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தில், இந்திய விமானி ஸ்மித் மச்சார் மீது அவரது சக விமானி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. விமானம் திடீரென ஆயிரக்கணக்கான அடி உயரத்தை இழந்த நிலையில், காயமடைந்த நிலையிலும் ஸ்மித் காக்பிட் கதவை திறக்க போராடினார்.
இதையும் படிங்க: இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் துணை விமானி யார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்! பகீர் பின்னணி!
பின்னர் மற்ற பணியாளர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்தினர். விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 174 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு சிகிச்சை பெற்று வரும் ஸ்மித்திடம் நெதன்யாகு தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது காக்பிட்டுக்குள் நடந்த சம்பவத்தை விளக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த ஸ்மித், சக விமானி முதலில் தொழுகை செய்ய விரும்பியதாகவும், பின்னர் திடீரென தனது தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு பார்வை மங்கியபோதும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே செல்வதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
காக்பிட் கதவை வெளியிலிருந்து திறக்க முயற்சி நடந்தபோதும், உள்ளே இருந்த சக விமானி அதை தடுக்க முயன்றதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். உடல் காயங்களுடன் போராடி இறுதியில் கதவை திறந்ததால், வெளியே இருந்தவர்கள் உள்ளே சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்மித்தின் துணிச்சலை பாராட்டிய நெதன்யாகு, அவரை இஸ்ரேல், இந்தியா மற்றும் உலகத்தின் ஹீரோ என்று குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் ஸ்மித்தும் பிரதமர் மோடியும் பங்கேற்று தீப்பந்தம் ஏற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் தீப்பந்தம் ஏற்றுவது பொதுவாக அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் முக்கியமான கவுரவமாகும். ஸ்மித்தின் வீரச் செயலுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் வகையில் நெதன்யாகு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய கேப்டன் ஸ்மிட் மச்சாரின் வீரத்தை பாராட்டி ரூ.1 கோடி வெகுமதி! பரிசை அறிவித்த நிறுவனம்!