நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியான நிலையில், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சோசியல் மீடியா நிறுவனங்கள் தங்களது நாட்டில் ஒரு அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றும், சமூக ஊடக தளங்களின் முறையான மேலாண்மை, பொறுப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒரு மசோதாவையும் நேபாள அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, கடந்த வாரம் நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 23 சோசியல் மீடியாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் நேபாள அரசிடம் பதிவு செய்ய வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலையால் பலி கிடா ஆன நயினார் நாகேந்திரன்... டிடிவி தினகரன் விலகலுக்கு காரணம் இதுவா?
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'ஜெனரல் இசட் புரட்சி' என்ற பெயரில் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். பலர் தடைசெய்யப்பட்டபகுதிகளை மீறி, போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரையும் மீறி நேபாள நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் பலியான நிலையில், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் தொலைபேசி மற்றும் இணைய முடக்கம் விதிக்கப்பட்ட போதிலும், ஜெனரல் இசட் ஆர்வலர்கள் டிக்டாக் மற்றும் ரெடிட் போன்ற தளங்கள் மூலம் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் திடீர் பல்டி... முக்கிய புள்ளியைச் சந்திக்க சாரை சாரையாய் வாகனங்களில் பயணம்...!