சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் விண்வெளி வீரராகவும், ஆக்ஸியம்-4 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவராகவும் அறியப்படுகிறார். சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் பயணித்தார். 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஜூன் 26 அன்று விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
18 நாட்கள், 7 மணி நேரம், 26 நிமிடங்கள் அங்கு தங்கி, பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, கலிபோர்னியா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினார். இந்தப் பயணத்தில், சுபான்ஷு சுக்லா நான்கு பேர் கொண்ட குழுவை வழிநடத்தினார். இந்தக் குழுவில் அமெரிக்காவின் பெக்கி விட்சன் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் அடங்குவர். அவரது தலைமையில், குழு மனித உடலில் விண்வெளி பயணத்தின் தாக்கம், புவி அவதானிப்பு, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை சோதித்தல் உள்ளிட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.

சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையில் விமானியாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். அவரது விமானப்படை அனுபவமும், தலைமைத்துவத் திறனும் இஸ்ரோவால் விண்வெளி வீரர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில், வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் தானும் இணைகிறேன் என்று கூறினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக இருக்கும் சுபான்ஷு சுக்லா, தனது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் ஒரு பில்லியன் கனவுகளை ஊக்குவித்துள்ளதாக தெரிவித்தார். இது நமது சொந்த மனித விண்வெளி விமானப் பயணமான ககன்யானை நோக்கி மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மைக் மிதக்குது பாருங்க! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலகலப்பான கலந்துரையாடல்..!
இதையும் படிங்க: கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!