ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய எல்லை மோதலில் இந்தியாவை தொடர்புபடுத்திய பாகிஸ்தானின் குற்றச்சாட்டை தலிபான் அரசின் பாதுகாப்பு அமைச்சர் மவ்லாவி முகமது யாகூப் முஜாகித் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "இது ஆதாரமற்றது; ஆப்கானிஸ்தான் தனது பிராந்தியத்தை யாருக்கும் எதிராக பயன்படுத்தாது" என்று அவர் அல் ஜசீராவுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
கடந்த வாரம் (அக்டோபர் 11-12), பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ தளங்களை தாக்கினர். இந்த மோதலில் இரு தரப்பிலும் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சில நாட்கள் நீடித்த இந்தப் பதற்றம், சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் போன்ற நாடுகளின் தலையீட்டால் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், "தலிபான் தலைவர்கள் இந்தியாவின் மடியில் அமர்ந்து, எங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்" என்று குற்றம்சாட்டினார். இதை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்து, "பாகிஸ்தான் தனது உள்நாட்டு தோல்விகளை அண்டைநாடுகளிடம் சுமத்துகிறது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை எதிராக தாக்குதல் நடத்த முயல்கிறது" என்று கூறியது.
இதையும் படிங்க: ஆப்கான் எப்பவுமே இந்தியா பக்கம் தான்!! பாக்., பாதுகாப்பு அமைச்சர் கதறல்!

இதற்கு பதிலளித்து பேசிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முஜாகித், "பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ஆப்கானிஸ்தான் சுதந்திரமான நாடு. இந்தியாவுடன் நம் உறவு தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டது. அதை வலுப்படுத்துவோம்.
அதேநேரம், பாகிஸ்தானுடன் அண்டை நாடுகளுக்கான நல்லுறவை விரும்புகிறோம். ஆனால் தீவிரவாதிகளை ஆதரிப்பது நம் கொள்கைக்கு எதிரானது" என்றார். ஆப்கானிஸ்தான் தனது பிராந்தியத்தை எந்த நாட்டுக்கும் எதிராக பயன்படுத்தாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சம்பவம், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் உறவில் ஏற்கனவே உள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. துருக்கியில் அக்டோபர் இறுதியில் நடைபெறவுள்ள தோஹா ஒப்பந்த மதிப்பாய்வு கூட்டத்தின் முன்னர், இரு நாடுகளும் அமைதியைப் பேணுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய அமைதிக்கு ஆதரவாக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த சர்ச்சை, தெற்காசியாவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தலாம் என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: நெல் மூட்டைகள் தேங்கி கெடக்குதுய்யா... EPS- யிடம் வேதனையைக் கொட்டி தீர்த்த விவசாயிகள்...!