அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், ஈரானை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் நோக்கத்தில் தான் செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் ஏற்படும் எந்தவொரு ஒப்பந்தமும் தங்களுக்கு பயனற்றதாக இருந்தாலும் அதுகுறித்து கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானை வலுக்கட்டாயமாக எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடச் செய்ய வேண்டும் என்பது தனது நோக்கம் அல்ல என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி தற்போது முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்திருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் என்ற நாடே மிஞ்சாது! அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும்? டிரம்ப் விடுத்த பயங்கர வார்னிங்!
உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி, குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தப் பகுதியில் ஏற்படும் ராணுவ பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அமெரிக்கா-ஈரான் மோதலின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஈரானின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையே தனக்கு விருப்பமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் ஈரான் மீது பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தை தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாடு வெளிப்படுவதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்திய நாட்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் மோதலின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த கடல்வழிப் பாதையின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இரு நாடுகளின் மாறுபட்ட நிலைப்பாடுகள், பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளன.
ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் முயற்சி இல்லை என்று டிரம்ப் கூறியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் தரப்பில் இருந்து வெளியாகும் பதில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கனடாவிலிருந்து எதுவுமே வேண்டாம்! இனி சலுகை இல்லை! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!