தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல முற்றிலுமாகத் தடை விதித்து, அதனைப் பாதுகாப்பகத்தில் வைப்பதற்கான ரூ.5 டோக்கனைப் பெறுவதற்கே பக்தர்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்கும் புதிய கெடுபிடி நடைமுறையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் கே.அண்ணாமலை மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ள கே.அண்ணாமலை, திருக்கோயில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற புதிய விதிமுறையால், ரூ.5 மதிப்புள்ள பாதுகாப்புத் டோக்கனைப் பெறுவதற்கே பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மன நிம்மதியோடும் அமைதியோடும் இறைவனைத் தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு, இந்த நிர்வாக ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் கடுமையான அலைச்சலையும் ஏற்படுத்துகிறது என்று சாடியுள்ளார்.

தொடர்ந்து கோவில் நிர்வாக நடைமுறைகள் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டுமே தவிர, பொதுமக்கள் கோயிலுக்குச் செல்வதையே யோசித்துத் தயங்கும் அளவிற்கு அச்சிரமங்களை உருவாக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் எடுப்பது போன்ற யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான அப்பாவிப் பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது என்று ஆவேசமாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவில்களில் செல்போன்களுக்கு தடை..! இதை செய்யலாமே.!! மாற்று ஐடியா கொடுத்த வானதி சீனிவாசன்..!
மேலும், திருக்கோயில்கள் மக்களுக்கு மன நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் வழங்கும் புனிதம் நிறைந்த இடங்களாக விளங்க வேண்டுமே அன்றி, பதற்றத்தையும் அலைக்கழிக்கும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அவை மாறிவிடக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசு நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்த இந்த விதிமுறையை உடனடியாக முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். பக்தர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அண்ணாமலை திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!