அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிரீன்லாந்து தீவை தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சியில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கிரீன்லாந்து தீவு டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக இருந்தாலும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவாகும். இது ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று டிரம்ப் கருதுகிறார். இதனால் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
சமீபத்தில் பேசிய டிரம்ப், “அவர்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, நாம் கிரீன்லாந்து விஷயத்தில் ஏதேனும் செய்யப் போகிறோம். ஏனென்றால் நாம் அதைச் செய்யாவிட்டால் ரஷ்யாவோ அல்லது சீனாவோ கிரீன்லாந்தைக் கைப்பற்றிவிடும்” என்று தெளிவாகக் கூறினார்.
இதையும் படிங்க: உத்தரவுக்கு காத்திருக்காதீங்க!! அமெரிக்கா அத்துமீறினா சுடுங்க! டென்மார்க் வீரர்களுக்கு பிரதமர் மெட்டே ஆர்டர்!

மேலும் அவர் கூறியதாவது: “நான் எளிமையான முறையில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அது முடியாவிட்டால் கடினமான வழியில் அதைச் செய்வோம். பேச்சுவார்த்தை மூலம் கிரீன்லாந்தை இணைக்க முடியாவிட்டால், அமெரிக்கா கடுமையான வழியில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
டென்மார்க்கின் மிகப்பெரிய ரசிகன் நான் தான். ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானது என்று அர்த்தமல்ல. எங்களுடைய பல படகுகளும் அங்கு சென்றிருக்கின்றன. கிரீன்லாந்து எங்களுக்கு கண்டிப்பாக தேவை.”
இந்த கருத்துக்கு டென்மார்க் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கிரீன்லாந்து மக்களும் இதை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
ஆர்டிக் பகுதியில் அதிகரித்து வரும் ரஷ்யா மற்றும் சீனாவின் இருப்பு, காலநிலை மாற்றத்தால் உருகி வரும் பனிப்பாறைகள், புதிய கடல் வழித்தடங்கள் ஆகியவை இந்தப் பிராந்தியத்தை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளன. இதனால் கிரீன்லாந்து விவகாரம் சர்வதேச அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: உத்தரவுக்கு காத்திருக்காதீங்க!! அமெரிக்கா அத்துமீறினா சுடுங்க! டென்மார்க் வீரர்களுக்கு பிரதமர் மெட்டே ஆர்டர்!