அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்ஐ சந்திப்பதற்காக பெய்ஜிங் செல்லும் திட்டம் உறுதியாகியுள்ளது. இதே ஆண்டில் (2026) ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: “உலகின் இரு சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இரு நாடுகளும் ஒன்றாக செயல்பட்டால் உலகம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.” கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி டிரம்ப் – ஜின்பிங் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அப்போது ஜின்பிங் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு சீனாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும், டிரம்ப் ஆட்சியில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனா கனிமவள ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்தது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஆதரவு தராத நாடுகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதனால் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பெய்ஜிங் சென்று ஜின்பிங்கை சந்தித்து உறவுகளை மேம்படுத்த முயன்றனர்.
இதையும் படிங்க: வரி அப்புறம் பாத்துக்கலாம்! தேர்தல் சீர்திருத்தம் முக்கியம்!! அடுத்த பிரச்னையை கையில் எடுத்தார் அதிபர் ட்ரம்ப்!

டிரம்பின் இந்த சீன பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர், தொழில்நுட்பப் போட்டி, புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. ஏப்ரல் பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள், தைவான், தென் சீனக் கடல், உக்ரைன் போர் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தலைவர்களின் சந்திப்பு உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். டிரம்ப் – ஜின்பிங் சந்திப்பு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக அமையும் வாய்ப்பு உள்ளது. 2026-இல் ஜின்பிங் அமெரிக்கா வரும் பயணத்துடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு புதிய திருப்பத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத் திட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வர்த்தகப் போர் முடிவுக்கு வருமா? அல்லது புதிய பதற்றங்கள் உருவாகுமா? என்பது இப்போது அனைவரது கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: களமிறங்குது அசூர படை!! மாஸ் காட்டப்போகும் இந்தியா!! ரூ. 3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்கள் வரப்போகுது!!