மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நைஜீரிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நைஜீரிய அரசு, இந்த வன்முறை கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம்களும் பாதிக்கப்படும் வகையில் நடப்பதாக தெரிவித்தது. இரு சமூகங்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று விளக்கமளித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நைஜீரிய அரசுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் பெரிய அளவிலான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சொகோட்டோ மாகாணத்தில் ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்... 2 வது நாளாக தொடரும் போராட்டம்... இடைநிலை ஆசிரியர்கள் கைது...!
அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்து டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டு பயங்கரவாதிகளின் முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், “நைஜீரியாவில் ஐ.எஸ். அமைப்பின் முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதல் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. பல பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். இது ஒரு தொடக்கம் மட்டுமே. வரும் நாட்களில் இன்னும் பல நடவடிக்கைகள் தொடரும்” என்று தெரிவித்தார்.
நைஜீரியாவில் ஐ.எஸ். மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இவை மத அடிப்படையில் மோதல்களை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதில் அமெரிக்கா தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நைஜீரியாவுக்கு அளிக்கப்பட்ட இந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காது கூசுற அளவுக்கு பேசுறாங்க!! வேடிக்கை பாக்காதீங்க ஸ்டாலின்! நயினார் நாகேந்திரன் தாக்கு!