விஜய் நடிப்பில் நாளை மறுநாள் (ஜனவரி 9) வெளியாக இருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அந்தப் படத்தை மலேசியாவில் விநியோகம் செய்யும் Malik Streams நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக நடிக்கும் இறுதிப் படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பொங்கல் விருந்தாக வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாகத் திட்டமிட்டபடி படம் வெளியாகாது எனத் தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மலேசியாவில் இப்படத்தை விநியோகம் செய்யும் ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ (Malik Streams) நிறுவனம், ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 7: ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN Productions) சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் (CBFC) படத்தை மறுசீராய்வுக் குழுவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தத் தாமதம் தங்களுக்கு மிகப்பெரிய நிதி இழப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகத் தயாரிப்புத் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு! தடுமாறி விழுந்த விஜய் - கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு!
இந்தப் படத்தின் வெளியீடு குறித்த நிச்சயமற்றத் தன்மை நிலவுவதால், ‘புக் மை ஷோ’ (BookMyShow) மற்றும் ‘டிக்கெட் நியூ’ (TicketNew) போன்ற முன்னனி டிக்கெட் முன்பதிவு இணையதளங்களில் இருந்து ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு பக்கங்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த பிறகே முன்பதிவு தொடங்க முடியும் என்பதால், தற்போதுள்ள சிக்கல் முடியும் வரை படத்தின் பெயர்களைத் தளங்களில் இருந்து மறைக்க அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மலேசிய விநியோகஸ்தரான ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ ஏற்கனவே ரிலீஸ் ஒத்திவைப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
சில காட்சிகளில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், ஆயுதப் படைகளைச் சித்தரிப்பதிலும் ஆட்சேபனை இருப்பதாகப் புகார் எழுந்ததே இந்தத் தணிக்கைச் சிக்கலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 7) தனது முடிவை அறிவிக்க உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வரும்பட்சத்தில் மட்டுமே புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்பதால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த பிறகே முன்பதிவு தொடங்கும் என்பதால், பொங்கல் ரேஸில் ‘ஜனநாயகன்’ பங்கேற்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.
இதையும் படிங்க: மேகமாய் வந்து போகிறேன்..! மலேசியாவில் மழை... தளபதி கச்சேரியில் வைப் செய்த ரசிகர்கள்...!