“நாம் இந்துக்களில் இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலிருந்தும் வேறுபட்டவர்கள். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், நினைவில் கொள்ளுங்கள் - உங்கள் வேர்கள் உயர்ந்த நாகரிகம், உன்னத சித்தாந்தம் மற்றும் பெருமைமிக்க அடையாளத்தில் உள்ளன. காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு போன்றது. நாங்கள் அதை மறக்க மாட்டோம், எங்கள் சகோதரர்களை அவர்களின் வரலாற்றுப் போராட்டத்தில் கைவிட மாட்டோம்”.. இப்படி உணர்ச்சி பொங்க பேசி உசுப்பேற்றிவிட்டு, அடுத்த சில நாட்களில் பஹல்ஹாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த காரணமாக இருந்தது பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஆசிம் முனிர்.

காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் இறங்கி தீவிரவாத முகாம்களை அழித்ததற்கு பதிலடியாக இந்தியாவுடன் தீவிரப் போருக்கு தயாராக வைத்தவர் பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல் ஆசிம் முனீர்.
இதையும் படிங்க: இனிமேல் இப்படி நடக்கக்கூடாது! பஹல்காம் தாக்குதலுக்கு 'AK' கண்டனம்.. விருது பெற்ற கையோடு அஜித் அட்வைஸ்..!
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரெண்ட் அமைப்பு பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. அடுத்த வாரத்தில் மே 7ம் தேதி இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் வேட்டையில் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத் தளங்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை, மாறாக தீவிரவாத முகாம்களை அழித்தமைக்காக தீவிரமான போருக்கு தயாராக வைத்தார் ஜெனரல் முனீர்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக 2018ம் ஆண்டு முனீர் அப்போது ராணுவ ஜெனரலாக இருந்த குவாமர் ஜாவித் பஜ்வா மூலம் நியமிக்கப்பட்டார். 8 மாதங்களில் ராணுவஜெனரலாக இருந்த பியாஸ் ஹமீதை நீக்கிவிட்டு ராணுவ ஜெனரல் பொறுப்பிற்கு முனீர் நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக இருந்த இம்ரான் கான் நீக்கப்படுவதற்கும் முனீர் முக்கியக் காரணமாக இருந்தார்.
ஏனென்றால், ஐஎஸ்ஐ தலைவராக முனீர் இருந்தபோதிலிருந்து பிரதமராக இருந்த இம்ரான்கானுக்கும் நல்லநட்புறவு இல்லை. ராணுவ ஜெனரலாக முனீர் நியமிக்கப்பட்டதும் இம்ரான்கானுக்கு எதிராக காய்களை நகர்த்தி அவரை பதவி நீக்கம் செய்யவைத்ததில் முனீருக்கு பங்கு உண்டு. ஏனென்றால், இம்ரான்கானின் முதல் மனைவி புஷ்ரா பீபி செய்த ஊழல்களை முனீர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததில் முக்கியக் பங்கு வகித்தார் என்பதால் இம்ரான் கான் அவர் மீது வெறுப்புடன் இருந்தார், ஒரு கட்டத்தில் ஐஎஸ்ஐ தலைவர் பொறுப்பிலிருந்து முனீரை நீக்க அதிக அழுத்தம் கொடுத்தார் இம்ரான் கான்.

ஆனால், பாகிஸ்தானின் அரசியலில் ஏற்ற மாற்றத்தால் 2022 ஏப்ரல் மாதம் இம்ரான் கான் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார், மீண்டும் தனது பணபலம், செல்வாக்கால் இம்ரான்கான் ஆட்சிக்கு வரமுயன்றார். ஆனால், ராணுவ ஜெனரலாக முனீர் நியமிக்கப்பட்டபின் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க வைத்தார்.
2022 நவம்பர் 29ம் தேதி ராணுவஜெனரலாக இருந்த பஜ்வா ஓய்வு பெற்றவுடன், அந்த பொறுப்பிற்கு சாதுர்யமாக ஐஎஸ்எஸ் தலைவராக இருந்த முனீரை பரிந்துரை செய்தார் பஜ்வா. இதையடுத்து, பிரதமராக இருந்த ஷெபாஸ் ஷெரீப் ராணுவ ஜெனரலாக முனீரை நியமித்தார்.
அப்போது இம்ரான்கானின் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெளியிட்ட அறிக்கையில் “ ராணுவ ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கும் முனீர் அரசியலமைப்புச் சட்டப்படி பணியாற்றுவார் என நம்புகிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், உள்நாட்டு அரசியல் விரோதங்களை மறந்துவிட்டு தேசத்துக்காக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம்” என மறைமுகமாக விமர்சித்திருந்தது.

2023, மே மாதத்தில் இருந்து இம்ரான் கான் சிறையில் இருந்து வருகிறார். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இம்ரான் கான் கட்சியான பிடிஐ தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது. இதனால், நவாஷ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்தன இதற்கு காரணமாக இருந்தவர் ராணுவ ஜெனரல் முனீர்தான். இம்ரான் கானை சிறையில் அடைத்து, அவரின் கட்சியை முடக்கியதில் ராணுவ ஜெனரல் முனீருக்கு முக்கியப் பங்கு உண்டு.
மங்களா நகலில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளித் திட்டத்தின் மூலம் அசிம் முனீர் ராணுவத்தில் சேர்ந்தார், அங்கு சிறப்பான பணியால் கவுரமிக்க “ஸ்வார்ட் ஆஃப் ஹானர்” விருதை பெற்றார். 1986 ஆம் ஆண்டு ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது, அவர் ஆட்சியின் கீழ் இரண்டாம் லெப்டினன்ட்டாக தனது ராணுவ வாழ்க்கையை முனீர் தொடங்கினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பிரிகேடியராக முனீர் பணியாற்றி இருந்தார், அப்போது ராணுவ உயர்அதிரியாக இருந்தது முன்னாள் ஜெனரல் பஜ்வாதான். அப்போது இருந்தே பஜ்வாவுக்கும், முனீருக்கும் நல்ல நெருக்கம் இருந்தது. இதனால்தான் 2016ம் ஆண்டு ராணுவ ஜெனரலாக பஜ்வா வந்தபோது, ராணுவத்தில் உயர் அதிகாரி பொறுப்பிற்கு வேகமாக முனீர் பதவி உயர்த்தப்பட்டார். 2017ம் ஆண்டு ராணுவ உளவுப்பிரிவு தலைவராகவும், 2018ல் லெப்டினென்ட் ஜெனரலாகவும், அதே ஆண்டில் ஐஎஸ்ஐ இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். இம்ரான் கான் ஆட்சியின்போது குஜ்ரன்வாலா படையின் கமாண்டராக முனீர் பணியாற்றி இருந்தார்.

தேசத்தின் நலனையும், ராணுவத்தின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நல்ல தலைவர் முனீர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் புகழ்கின்றன. பல நேரங்களில் ராணுவத்தையும், ஐஎஸ்ஐ அமைப்பையும் மக்களின் விமர்சனத்திலிருந்து முனீர் காப்பாற்றியுள்ளர்.
2018ம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷௌகத் அஜீஸ் சித்திக், ஐஎஸ்ஐ அமைப்பை கடுமையாக விமர்சித்தார், சாதகமான முடிவுகளைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் நீதித்துறை நடவடிக்கைகளை கையாள்வதாகக் விமர்சித்தார். இதையடுத்து, அதிபர் ஆரிஃப் ஆல்வியால் நீதிபதி சித்திக் பதவி நீக்கம் செய்ய வைத்தவர் ஐஎஸ்ஐ தலைவராக இருந்த முனீர்.
அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஷுஜா நவாஸ் தனது "தி பேட்டில் ஃபார் பாகிஸ்தான்" என்ற நூலில் ஜெனரல் முனீர் குறித்து கூறுகையில் “ஜெனரல் முனீர் இஸ்லாமிய பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு கடுமையான அதிகாரி. சவுதி அரேபியாவில் லெப்டினன்ட்-கர்னலாகப் பணியாற்றியபோது புனித நூலை மனப்பாடம் செய்த 'ஹாஃபிஸ்-இ-குர்ஆன்” என புகழ்ந்துள்ளார்.
, பாகிஸ்தான்-இந்தியா உறவுகள் ஏற்கனவே மோசமான நிலையை அடைந்திருந்த நேரத்தில்தான், ஜெனரல் முனீர் ராணுவத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2019ல் பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் நடந்தபோது லெப்டினன்ட் ஜெனரல் முனீர் ஐஎஸ்ஐ தலைவராக இருந்தார், அதில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்க்வாவில் உள்ள பாலகோட்டில் வான்வழித் தாக்குதலை நடத்தி இந்தியா பதிலடி கொடுத்தது. அப்போது ஐஎஸ்ஐ தலைவராக இருந்தது முனீர்தான்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அப்பாஸ் நசீர் கூறுகையில் “இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு அவரது கட்சி தடைவிதிக்கப்பட்டதையடுத்து, அதிகாரத்துக்கு பின்னால் எப்போதும் இருக்கும் ராணுவம், நம்பகத்தன்மை நெருக்கடியை மக்கள் மத்தியில் எதிர்கொண்டது.
பழங்குடிப் பகுதிகளில் பாகிஸ்தான் தாலிபான்கள் தாக்குதல்களை அதிகரித்ததால், ஆப்கானிய தாலிபான்களுடனான உறவுகள் மோசமடைந்தது. பாகிஸ்தான் ராணுவமும் அரசும் ஆப்கானிய அகதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கின. பலுசிஸ்தானில், மக்கள் கிளர்ச்சி மற்றும் அரசியல் கிளர்ச்சி வேகம் எடுத்தது. பாகிஸ்தான் பெருகிவரும் பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் ஐஎம்எப் உதவியை நாட வைத்தும் ஜெனரல் முனீர்தான்.
ஜெனரல் முனீர் அதிகாரத்தை தனது கைகளில் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, இம்ரான் கானை சிறையில் அடைத்தார். பாகிஸ்தானில் கூட்டாட்சி நடந்தாலும் அது ஜெனரல் முனீரின் ஆதரவில்தான் இயங்குகிறது. திரைமறைவில் அதிகாரமிக்க பிரதமராக முனீர் செயல்பட்டு வருகிறார்.

பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் வலுவான அரசியல் தலைமை இல்லாத பாகிஸ்தானில், ஜெனரல் முனீர் தன்னை புதிய வலிமையானவராக நிலைநிறுத்திக் கொள்கிறார். அதற்காக, மதம், சித்தாந்தம் மற்றும் இந்தியா எதிர்ப்பு, காஷ்மீர் விவகாரத்தை எப்போதுமே சூடாக, பரபரப்புடன் வைத்துள்ளார்.
மக்களின் உணர்வுகளையும், ராணுவ வீரர்களின் உணர்வுகளைவும் சீண்டி விளையாடுவதிலும், தீவிரவாதிகளை உசுப்பேற்றுவதிலும் ஜெனரல் முனீர் வல்லவர். அப்படித்தான் கடந்த ஏப்ரல் 17ம் தேதி முனீர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நமது மதம் வேறு, நமது பழக்கவழக்கங்கள் வேறு, நமது மரபுகள் வேறு, நமது எண்ணங்கள் வேறு, நமது லட்சியங்கள் வேறு. அதுதான் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் கோட்பாட்டின் அடித்தளம். நாம் எப்போதுமே இரு நாடுகள்," என்று பேசினார். அதைத்தொடர்ந்து 5 நாட்கள் இடைவெளியில் பஹல்காமில் இந்தியர்கள் 26 பேரை தீவிரவாதிகள் கொடுரமாகக் கொலை செய்தனர். தீவிரவாதிகள் கொலை செய்தனர் என்று பொதுவாகக் கூறினாலும், அதற்கு மூலமாக இருந்தது ஜெனரல் முனீர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி? ராணுவ தளவாடங்களுடன் போர் விமானங்கள் தரையிறக்கம்..!