காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.

ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?
தற்போது சண்டை நிறுத்தம் காரணமாக எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. ஆனாலும், இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். எனவே எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாக்கியுள்ள ரிசாட்-1பி ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வரும் 18 ஆம் தேதி காலை 5.59 மணியவில் பிஎஸ்எல்வி- சி 61 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவுக்கான பிரத்யேக பூமி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்த வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் மற்றும் அதன் இயக்குனர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு தரிசனம் செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மே 18 ஆம் தேதி அதிகாலை 5.59 மணிக்கு இஸ்ரோவின் 101 ராக்கெட் விண்ணில் ஏவப்படும். பிஎஸ்எல்வி சி61 எக்ஸ் எல் எனப்படும் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்படும். ஆா்ஐஎஸ்ஏடி-1பி செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருள்களை கூட துல்லியமாக கண்டறியும் புவி கண்காணிப்பிற்காக ஏவப்படுகிறது.

1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்ரோ தற்பொழுது 63 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனை அடுத்து நாசா உடன் இணைந்து அமெரிக்கா இந்தியா இணைந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படும்.

இதனை அடுத்து வணிக ரீதியான அமெரிக்கா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ககன்யான் திட்டம் மிகச் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மனிதர்கள் இல்லாமல் அனுப்பி வைக்கப்படும் மார்ச் 2027 ஆம் ஆண்டு மனிதர்களுடன் ககன்யான் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நாராயணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக்., சீனா ஆட்டத்திற்கு முடிவு.. எல்லைகளை கண்காணிக்கும் ரிசாட்-1பி.. இஸ்ரோ தலைவரின் முக்கிய அப்டேட்..!