தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஒட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதும், உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. தமிழக அரசு மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான சட்டரீதியான அபராதங்கள், சிறைத்தண்டனை, ஓட்டுநர் உரிமம் ரத்து போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நெல்லையில் ஆட்டோவும், கல்லூரி வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 10ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சுத்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல்லை அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு மாணவர்களை இசக்கிமுத்து, என்ற டிரைவர் அந்த கல்லூரியின் பஸ்சில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் அழைத்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில் சுத்தமல்லியில் இருந்து கோபால சமுத்திரம் நோக்கி பள்ளி மாணவர்களை ஏற்றி ஆட்டோ ஒன்று வந்துள்ளது. ஆட்டோ மற்றும் கல்லூரி பஸ் 2 வாகனங்களும் கோபாலசமுத்திரம் அருகே நேருக்கு நேர் மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் உட்பட 4 காயமடைந்தனர்.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?
விசாரணையில் கல்லூரி பஸ்சை ஓட்டி வந்த இசக்கிமுத்து என்ற டிரைவர் அதிக மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டது. மது போதையால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து சுத்தமல்லி காவல்துறையினர் இசக்கிமுத்துவை கைது செய்தனர்.
காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவி செல்வ பாலா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநரின் அஜாக்கிரதையால் பள்ளி மாணவி பலியான சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தையும் அதிர்வலையையும் உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!