மாவோயிஸ்டுகளின் கோட்டையாகக் கருதப்படும் பஸ்தார் வனப்பகுதியில் இன்று அதிகாலை முதலே பாதுகாப்புப் படையினர் தாக்குதலைத் தொடங்கினர். பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் நடந்த இந்த மோதலில், மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவரான சச்சின் மங்து உள்பட 14 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் மாவோயிஸ்டுகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை எட்டும் நோக்கில், பாதுகாப்புப் படையினர் இந்த அதிரடியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தின் பஸ்குடா-தாரேம் வனப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் (DRG) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த தகுந்த பதில்டியில் 2 மாவோயிஸ்டுகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் சுக்மா மாவட்டத்தின் கொன்டா-கிஸ்தாராம் பகுதியில் இரண்டாவது என்கவுன்டர் நடைபெற்றது.
இந்த இரண்டாவது மோதலில் பாதுகாப்புப் படையினரின் கரம் ஓங்கியது. இதில் 12 மாவோயிஸ்டுகள் அதிரடியாக வீழ்த்தப்பட்டனர். பலியானவர்களில் கொன்டா பகுதி கமிட்டியின் முக்கியத் தலைவராகத் தேடப்பட்டு வந்த சச்சின் மங்துவும் ஒருவர் எனப் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளனர். மோதல் நடந்த இடங்களிலிருந்து ஏகே-47 (AK-47), இன்சாஸ் (INSAS) ரகத் துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. “இந்த வேட்டையில் நமது வீரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை” எனப் பஸ்தார் மண்டல ஐ.ஜி. சுந்தர்ராஜ் அவர்கள் பெருமிதத்துடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வடமாநில இளைஞர் மீது தாக்குதல்... என்ன நடந்தது? ஐ. ஜி. அஸ்ரா கார்க் விளக்கம்...!
சமீபகாலமாக மாவோயிஸ்டுகளுக்கு எதிரான ‘ஆபரேஷன்’களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பதுங்கியிருந்து கொரில்லா தாக்குதல்களை முன்னெடுக்கும் மாவோயிஸ்டுகளை வேரோடு அழிக்க நவீனத் தொழில்நுட்பங்களும், டிரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய வெற்றிகரமான என்கவுன்டரைத் தொடர்ந்து, அப்பகுதியில் இன்னும் யாராவது பதுங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய தீவிரமாகத் தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதல் மாவோயிஸ்டு இயக்கத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பக்தர்கள் கவனத்திற்கு: ஏழுமலையான் தரிசனம் ரத்து! திருப்பதி கோயில் 10 மணி நேரம் மூடல்! வெளியான முக்கிய அறிவிப்பு!