ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர் சித்திக் மற்றும் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திருநெல்வேலி முகமது அலி (எ) யூனுஸ் (எ) மன்சூர் ஆகிய இரு தீவிரவாதிகளை தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை கைது செய்துள்ளது.

அபுபக்கர் சித்திக் 1995 முதல் தமிழ்நாட்டில் பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டமிட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர். 1995ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு, நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கு, 1999ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உட்பட 7 இடங்களில் (சென்னை, திருச்சி, கோவை, கேரளா) குண்டுகள் வைத்த வழக்கு, 2011 மதுரை திருமங்கலம் அத்வானி ரத யாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012 வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013 பெங்களூர் பாஜக அலுவலகம் முன் குண்டு வெடித்த வழக்குகளில் முக்கிய பங்காற்றியவர்.
இதையும் படிங்க: சிக்கியது புது ஆதாரம்.. பாகிஸ்தானை தோலுரிக்க தயாராகும் இந்தியா.. பயங்கரவாதிகளின் அடிமடிக்கு வேட்டு..
திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி 1999-ல் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் குற்றவாளியாக இருந்தவர். இவர் நாகூர் அபுபக்கர் சித்திக்குடன் சுமார் 26 வருடங்களாக தலைமறைவாக இருந்தார்.

பல ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டி வந்த இருவரையும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்த தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (1.7.2025) சென்னை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி தமிழ்நாடு பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் போதை பொருள் வழக்கு... அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்... நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு சிறை!!