சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளை தூய்மையாக வைத்திருக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மெரினா கடற்கரையில் மட்டும் தினமும் 7 கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் மற்றும் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தினசரி சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் உள்ளிட்ட பிற கடற்கரைகளிலும் 53 தூய்மைப் பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்து வருகின்றனர்.
ஆனால், பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு தராததால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள், உணவு எச்சங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் வீசப்படுவது தொடர்கிறது. குப்பைத் தொட்டிகள் இருந்தும் அதில் போடாமல் தரையில் எறிந்து விடுவது பெரும் பிரச்சினையாக உள்ளது.
இதையும் படிங்க: மோடி பொங்கல் விழா! திருச்சியில் அமித்ஷா பங்கேற்பு!! பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு!

இதனால் கடற்கரையின் அழகு கெடுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னையின் நற்பெயரும் கெடுகிறது.
எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 படி, கடற்கரையில் எந்த வகை கழிவுகளையும் திறந்தவெளியில் கொட்டுவது சட்டவிரோதம்.
குப்பை கொட்டுபவர்கள் மீது ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது.
"குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கழிவுகளை போடுங்கள். தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – இது அனைவரின் பொறுப்பு" என்று மாநகராட்சி பொதுமக்களிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளது.
இதையும் படிங்க: இது மோடி பொங்கல்! தமிழ்நாடு விசிட் கன்ஃபார்ம்! அடுத்தடுத்து அமித் ஷா போட்டு வைத்த மாஸ்டர் ப்ளான்!