இந்தியாவில் தெருநாய்களின் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ரேபிஸ் நோய் பரவல் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு, இன்று முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 8 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் அரசுகளின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காப்பகங்களில் உரிய ஊழியர்களை நியமிக்கவும், நாய்கள் தப்பாமல் இருக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. நாய்க்கடி புகார்களைப் பதிவு செய்ய ஒரு வாரத்திற்குள் தொலைபேசி உதவி எண்ணை அமைக்க வேண்டும் என்றும், புகார்கள் மீது நான்கு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெருநாய்களை கருத்தடை செய்து மீண்டும் விடுவிப்பதால் பிரச்சினை தீராது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், நகர்ப்பகுதிகளில் ஒரு தெருநாய் கூட இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதையும் படிங்க: ஏதாச்சும் நம்புற மாதிரி இருக்கா? பணமூட்டை சிக்கிய விவகாரம்.. நீதிபதிகள் காட்டம்..!
தெருநாய்களின் தாக்குதலால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. 2022-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 3.5 லட்சம் பேர், தமிழ்நாட்டில் 3 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். 2023-ல் மட்டும் 4,04,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 30-60% 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றம், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் தடுப்பூசி வழங்குவதை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டது. மேலும், விலங்கு நல விதிகளை பின்பற்றி, தெருநாய்களை முறையாக கண்காணிக்கவும், அவற்றுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யவும் அறிவுறுத்தியது.

இந்த விவகாரத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசுகள் விரிவான அறிக்கையை 8 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, தெருநாய்களால் ஏற்படும் பொது சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மக்களின் பாதுகாப்பையும், விலங்கு நலனையும் சமநிலைப்படுத்துவதற்கு இந்த உத்தரவு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான நாய்களை அடைக்க போதுமான காப்பகங்கள் இல்லை என விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை நீண்டகால தீர்வுக்கு பதிலாக குறுகிய கால நடவடிக்கையாக இருக்கலாம் என விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு.. இது முடியாது போலயே.. தமிழக அரசை விளாசிய சுப்ரீம்கோர்ட்..!!