சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் தமிழக அரசு விசாரணையை தாமதப்படுத்த முயல்வதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2011-15 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 81 பேரிடம் இருந்து சுமார் 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட 2,200 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஜூனில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின், 2024ம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஜாமீனுக்கு பின், அவர் தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் அமைச்சரானதை உச்சநீதிமன்றம் கண்டித்தது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் ஜாமீன் ரத்து செய்ய உத்தரவிடுவோம் என்று கூறியதையடுத்து, செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் 27ம் தேதி ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..?
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி, வழக்கை தாமதப்படுத்த 2000 பேரை குற்றவாளிகளாக சேர்த்ததாக தமிழக அரசை விமர்சித்தனர். “அமைச்சரின் வாழ்நாளில் விசாரணை முடியாமல் இருக்கவே இந்த முயற்சி நடப்பதாக தெரிகிறது,” என கருத்து தெரிவித்த நீதிமன்றம், 500க்கும் அதிகமான சாட்சிகள் உள்ளன. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான விசாரணை வழக்காக இருக்கும். இந்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் அறை போதுமானதாக இருக்காது. குற்றம்சாட்டப்பட்டவரின் இருப்பை காட்ட ஒரு கிரிக்கெட் மைதானம் கூட தேவைப்படலாம்'' என்று கடிந்துகொண்டது. மனுதாரர் ஒய்.பாலாஜி தரப்பில், தமிழக அரசு செந்தில் பாலாஜியை காப்பாற்ற முயல்வதாக வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர்கள், மனுதாரரின் முந்தைய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினர்.

மேலும் பிரதான வழக்கில் எத்தனை பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது? பணம் எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய விவரங்களை வழங்க வேண்டும். வேலைக்கு பணம் பெற்ற வழக்கை எவ்வாறு நடத்தப்போகிறீர்கள்? என்பது பற்றிய தெளிவான திட்டத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த வழக்கை எவ்வளவு காலத்தில் விசாரித்து முடிக்கப்படும் என்பது பற்றியும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி.. ஆக.,19-ல் விசாரணையை துவங்கும் சுப்ரீம் கோர்ட்..!