மகாராஷ்டிரா மாநிலத்தில், மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் இருந்து 92 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் பின்னர் மகாராஷ்டிராவிலும் இதேபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது நாட்டின் 13 மாநிலங்களில் மகளிர் நல உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
மகாராஷ்டிரா “லட்கி பஹின் யோஜனா (Ladki Bahin Yojana)” என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2.44 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!
இந்த நிலையில், திட்டத்தின் பயனாளிகள் அனைவரும் தங்களது சுயவிவரங்களை உறுதிப்படுத்தும் KYC (Know Your Customer) படிவத்தை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதற்காக எட்டு மாதங்கள் அவகாசமும் வழங்கப்பட்டது.

காலக்கெடு நிறைவடைந்த பிறகு, பயனாளிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 80 லட்சம் பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 92 லட்சம் பேர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மொத்த பயனாளிகளில் சுமார் 38 சதவீதம் ஆகும்.
KYC படிவத்தை சமர்ப்பிக்காதவர்கள் மட்டுமல்லாமல், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக வருமானம் பெறுபவர்கள், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் ஏற்கனவே பிற அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற்று வருபவர்கள் ஆகியோரும் தகுதி அடிப்படையில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மகளிர் திட்டத்தில் முறைகேடாக பெயர் பதிவு செய்து உதவித்தொகை பெற்று வந்த 29 ஆயிரம் ஆண்களும் கண்டறியப்பட்டு, அவர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில், தகுதியுடைய தங்களது பெயர்களும் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளதாக ஏராளமான பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பயனாளிகள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்படும் என்றும், அதன் பிறகே இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய TVK நிர்வாகி... தர்ம அடி வாங்கிய சம்பவம்..! கனிமொழி MP கண்டனம்..!!