பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குச் சார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகப் பல்வேறு அமைப்புகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம், ஆதார் அட்டையை குடியுரிமைக்கான சான்றாக ஏற்க முடியாது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) வாதத்தை ஏற்று, முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வழக்கில் இந்த முடிவை எடுத்தது.
இதையும் படிங்க: ஆதார், ரேஷன் கார்டு எல்லாம் செல்லாது! கறார் காட்டும் தேர்தல் ஆணையம்..
இந்தத் தீர்ப்பு, வாக்காளர் பட்டியலில் தவறான அல்லது புனையப்பட்ட பதிவுகளை அகற்றுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உள்ள சட்டப்பூர்வ அதிகாரத்தை உறுதி செய்கிறது. தேர்தல் ஆணையம், ஆதார் எண்ணை வாக்காளர் பதிவுக்குப் பயன்படுத்தினாலும், அது குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கு முடிவான ஆவணமாக கருதப்பட முடியாது என்று வாதிட்டது.
இதற்கு ஆதரவாக, உச்சநீதிமன்றம், ஆதார் அட்டை முதன்மையாக அடையாளச் சான்றாக வழங்கப்படுகிறது, குடியுரிமையை நிரூபிக்க அல்ல என்று தெளிவுபடுத்தியது. மேலும், ஒருவர் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க ஏதேனும் ஆவணம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்றிதழ் இல்லை என்றும் அடையாளத்தை அங்கீகரிப்பது மட்டுமே என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேர்தல் ஆணையத்தின் செயல்முறை பெருமளவு வாக்காளர்களை விலக்குவதற்கு வழிவகுக்கும் என்று வாதிட்டார். ஆனால், நீதிபதி சூர்யகாந்த், “தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருந்தால், இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறி, ஆணையத்தின் நிலைப்பாட்டை ஆமோதித்தார்.

இந்தத் தீர்ப்பு, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்வதற்கு தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. ஆதார் அட்டை பல சேவைகளுக்கு அடையாளச் சான்றாக ஏற்கப்பட்டாலும், குடியுரிமைக்கு முடிவான ஆவணமாக பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை மட்டுமே கருதப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. இது, எதிர்க்கட்சிகளின் “வாக்காளர் விலக்கல்” குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க: தெருநாய்களை பிடிக்க 8 வாரம் தான் டைம்.. அதிரடி ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்..!!