கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட தங்க முறைகேடு வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் துவாரபாலகர் சிலைகளுக்கும், சன்னதியின் கதவு பிரேம்களுக்கும் தங்க முலாம் பூசும் பணியின்போது சுமார் 4.5 கிலோ தங்கம் காணாமல் போனதாக எழுந்த புகார், ஐயப்ப பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரிக்க கேரள காவல்துறை சார்பில் கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.

இந்தக் குழு நடத்திய விசாரணையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் அதிகாரிகள் உட்பட பலர் சிக்கினர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தங்க முலாம் பூசும் பணியை ஏற்ற கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரும், பூஜாரியுமான உன்னிகிருஷ்ணன் போத்தி முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருவனந்தபுரத்தில் அவரிடம் 10 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியபின் SIT அவரைக் கைது செய்தது. உன்னிகிருஷ்ணன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை தங்கத் தகடு மாயம்: சென்னையில் பங்கஜ் பண்டாரி வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நிறைவு!
இந்நிலையில், உன்னிகிருஷ்ணன் போத்தியுடனான தொடர்பு காரணமாக நடிகர் ஜெயராமின் பெயரும் விசாரணையில் இடம்பெற்றது. சென்னையில் உள்ள ஜெயராமின் இல்லத்தில் தங்கத் தகடுகளை வைத்து பூஜை நடத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. இதையடுத்து SIT அதிகாரிகள் ஜெயராமிடம் சென்னையில் விசாரணை நடத்தினர். அப்போது, உன்னிகிருஷ்ணனுடன் தனக்கு நீண்டகால நட்பு இருப்பதாகவும், எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை எனவும் ஜெயராம் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் (மணி லாண்டரிங்) நடைபெற்றிருக்கலாம் எனக் கருதி அமலாக்கத்துறை (ED) தனியாக வழக்குப்பதிவு செய்தது. கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் இந்த வழக்கை கையில் எடுத்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெயராமுக்கு சம்மன் அனுப்பினர். அதன்பேரில், இன்று (பிப்ரவரி 17, 2026) ஜெயராம் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமான கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம், "இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். ஏதேனும் முறைகேடு நடந்திருந்தால், அதில் ஈடுபட்ட அனைவரும் பிடிபட வேண்டும். ஐயப்பன் அவர்களை விட்டுவைக்க மாட்டார். உண்மையை வெளிக்கொணர்வது ஒவ்வொரு மலையாளியின் கடமை" என்று கூறினார். இந்த வழக்கு தொடர்பாக SIT மற்றும் ED ஆகிய இரு அமைப்புகளும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐயப்ப பக்தர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: பூதாகரமாகும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!! களமிறங்கிய ED ..!! பல இடங்களில் அதிரடி ரெய்டு..!!