ஜம்மு-காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் பனி லிங்கம், இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக கரைந்திருப்பது பக்தர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ஆறு நாட்களில் பனி லிங்கத்தின் சுமார் 90 சதவீதம் வரை கரைந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 12,756 அடி உயரத்தில், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சிவபக்தர்கள் தரிசிக்கும் முக்கிய புனிதத் தலமாகும். குறிப்பாக சமீபத்திய பாதுகாப்பு சவால்களுக்கு பிறகும் இந்த ஆண்டு பக்தர்கள் அதிக ஆர்வத்துடன் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர்.
ஆனால், இந்த முறை பனி லிங்கம் மிக வேகமாக உருகியிருப்பது விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழல் விஞ்ஞானி பத்மஸ்ரீ டாக்டர் ஏகலவ்யா சர்மா கூறுகையில், உலக சராசரியை விட இமயமலைப் பகுதியில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், 2000 முதல் 2022 வரை இமயமலையின் பனிப்பொழிவு மற்றும் பனிப்பாறைகளின் பரப்பளவு 23 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை இன்று துவக்கம்!! யாத்திரிகர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளை!!

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் மட்டுமல்லாமல், யாத்திரைக்காக மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு வசதிகளும் பனி லிங்கம் வேகமாக கரைவதற்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்கள், கனரக இயந்திரங்கள், சோலார் விளக்குகள் மற்றும் குகை அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சமையல் கூடங்கள் ஆகியவை அப்பகுதியின் நுண்ணிய காலநிலை அமைப்பை மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் குகைக்குள் செல்வதால் உடல் வெப்பம், ஈரப்பதம் மற்றும் காற்றின் வெப்பநிலை அதிகரித்து, பனி உருகும் வேகம் மேலும் உயர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, அதிக வெப்பம் உருவாக்கும் கட்டமைப்புகளை குறைப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்துவது அவசியம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று மட்டும் 9,153 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்காக புறப்பட்டுள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய யாத்திரையில் இதுவரை 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 28-ஆம் தேதி யாத்திரை நிறைவடைய உள்ளது.
இதையும் படிங்க: ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!