இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பஹல்காமில் இந்திய பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் கொன்றதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகளின் புகலிடம், பயிற்சி மையம், தலைமை அலுவலகம், தங்குமிடங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இந்திய ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இதையும் படிங்க: இது எங்கள் பூமி.. பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.. இலங்கை அரசு திட்டவட்டம்..!

பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், போர் பதற்றம் அதிகரித்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக வளங்கள் ராணுவத்துக்கு அதிகமாக திருப்பிவிடப்படும் என்பதால், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ் கிடைப்பது தட்டுப்பாடு வரலாம். இது போரில் ஈடுபடும் எந்த நாட்டிலும் இதுபோன்ற அசாதாரண சூழல் வருவது இயல்புதான்.
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்த போது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது. அந்த நாடுகளிலும் இதே சூழல் இருந்தது. அத்தகைய சூழல் இந்தியாவில் வந்துவிடுமா எனக் கருதி மக்கள் பெட்ரோல், டீசலை அதிகளவில் வாங்கிக்குவிக்க முயல்வர், சிலிண்டரையும் வாங்க முயல்வார்கள். இதனால் வழக்கமான தேவையைவிட அதிகரித்து, பற்றாக்குறை ஏற்படும். இதைத் தவிர்க்கவே இந்தியன் ஆயில் நிறுவனம்(ஐஓசி) விளக்கம் அளித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், டீசல், பெட்ரோல் , சமையல் சிலிண்டருக்கு பற்றாக்குறை வந்துவிடும் என்ற தகவலை நம்பவேண்டாம். மக்கள் அதை நம்பி அதிகமானவற்ற வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்.
இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் போதுமான அளவு பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் இருப்பு இருக்கிறது. நாட்டின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய இருப்பு கையிருப்பு இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் வந்த வீடியோவில் மக்கள் பெட்ரோல், டீசல் வாங்க நீண்ட வரிசையில் நிற்பது போன்ற காட்சிகளை நம்பவேண்டாம். அதுபோன்ற சம்பவங்கள் நடக்காது மக்கள் பதற்றமடைந்து, பீதியால் அதிகமான பொருட்களை வாங்கி சேமிக்காதீர்கள்.

மக்கள் அமைதியாகவும், தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து மக்களுக்கும் தடையின்றி எரிபொருள் கிடைக்கும் வகையில் எங்கள் நிறுவனம் தொடர்ந்து சப்ளையில் ஈடுபடும். சிறப்பான சேவையை உங்களுக்கு நாங்கள் வழங்குவதற்கு மக்கள் எங்களுக்க ஒத்துழைத்து தேவையின்றி கூட்டமாக பெட்ரோல் நிலையத்துக்கு சென்று வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆரம்பித்து வைத்தது பாகிஸ்தான்... முடித்து வைத்தது இந்தியா- உமர் அப்துல்லா பெருமிதம்..!