சட்டவிரோத பண பரிவர்த்தனைகள், கருப்பு பணம், அந்நிய செலாவணி மோசடி, அல்லது பணமோசடி தொடர்பான குற்றச்செயல்களை விசாரிக்க, ஆதாரங்களை சேகரிக்க, மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது வழக்கம். அங்கிருந்து குறிப்பிட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி முறைகேடுகள் ஏதேனும் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில் தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனில் அம்பானி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் இளைய மகனும், முகேஷ் அம்பானியின் தம்பியும் ஆவார். ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர். இந்த குழுமம் 2006-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரிவினையைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.

அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் நிதி சேவைகள், உள்கட்டமைப்பு, மின்சார உற்பத்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டன. ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பணக்காரராக இருந்த இவர், 2008-ல் ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி 42 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கினார். இருப்பினும், நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள், கடன் பிரச்சனைகள் மற்றும் தொழில் நஷ்டங்கள் காரணமாக 2020-ல் இவர் திவால் நிலைக்கு சென்றதாக அறிவித்தார்.
தற்போது, அவரது நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: #RAID: சத்தீஸ்கர் EX. முதல்வர் பூபேஷ் பாபு மகன் கைது..! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!
இதையும் படிங்க: வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்... சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் ரெய்டு...!