பீகார் மாநிலம் லஹிசாராய் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அசோக்தாம் சிவன் கோவிலில் இன்று (ஆகஸ்ட் 17) அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை முன்னிட்டு சிவபெருமானுக்கு ஜல அபிஷேகம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பதற்றம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை நேரத்தில் பக்தர்கள் கூட்டம் வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. சுமார் 50 ஆயிரம் பேர் வரை கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் திரண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!
இந்த நிலையில் மின்கம்பம் சாய்ந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மின்சாரம் தொடர்பான அச்சம் கூட்டத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் திடீரென பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் நகர முயன்றதால் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்புகள் உடைந்ததாகவும், பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கீழே விழுந்தவர்களால் நிலைமை மேலும் மோசமடைந்தது. குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு லஹிசாராய் சதார் மருத்துவமனை உள்ளிட்ட அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் தகவல்படி, அதிகாலை முதலே கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு ரயில்கள் அங்கு நின்றதால் திடீரென பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் கூட்ட நெரிசல் தீவிரமடைய ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்துக்கு பீகார் முதல்வர் சம்ராட் சவுத்ரி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோவில் பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!