கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தால் தமிழகம் முழுவதும் துக்கத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில், பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

கூட்ட நெரிசலில் பல அப்பாவி உயிர்கள் பறிபோன சம்பவம் நிகழ்ந்து இன்னும் ஒரு வாரம் கூட முடியாத நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் பண்டிகை மகிழ்ச்சியுடன் நடைபெற்ற பூஜை, கட்சியின் உணர்வுபூர்வமான அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 27ம் தேதி அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார நிகழ்ச்சியில், விஜய்யின் வருகைக்காக கூடிய லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கட்டுப்பாடற்ற நெரிசலில் சிக்கினர். போலீஸ் பாதுகாப்பு குறைபாடு, நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட தாமதம் என பல காரணங்கள் இந்த விபத்துக்கு வழிவகுத்தன.
இதையும் படிங்க: டெல்லி சாமியாரின் வீட்டில் ஆபாச சீடி-க்கள் - பாலியல் பொம்மை..! ஏழை மாணவிகளின் நம்பிக்கையை உடைத்த பரிதாபம்..!
உயிரிழந்தவர்கள் பெரும்பாலோர் 2-3 நிமிடங்கள் மூச்சுத்திணறலால் இறந்ததாகவும், 25 பேர் தள்ளுமுள்ளில் உள் உறுப்புகள் பாதிப்படைந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன. இதில் 12 ஆண்கள், 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தும், பிரதமர் மோடி, இலங்கை அரசு உள்ளிட்ட தேசிய, சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், தமிழகம் கண்ணீருடன் இருக்கும் நிலையில், த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை பரபரப்பை ஏற்படுத்தியது.

பனையூர் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையில், கட்சி உயரதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு வாழை தோரணம் கட்டி மாலை அணிவித்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிலும் அவருடைய கார்களுக்கு ஆயுத பூஜை கொண்டாட்டம் நடந்துள்ளது.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், "கரூர் துயரத்தை மறந்து வேகமாக அடுத்த பக்கத்திற்கு செல்லும் த.வெ.க. தலைமை" என்று விமர்சித்துள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் கெடுபிடி! ரூல்ஸை அடுக்கும் அமைச்சர்! மக்கள் அவதி!