டாக்கா, ஜனவரி 6: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 286 பேர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வரும் ஜனவரி 21ஆம் தேதி முறையாக பதிவு செய்ய டாக்கா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு வங்கதேசத்தின் தற்போதைய இடைக்கால அரசுக்கு எதிரான சதி திட்டம் தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறியதால், நாடு முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஆட்சியில் இருந்த அவாமி லீக் கட்சித் தலைவரும் பிரதமருமான ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதைத் தொடர்ந்து, மாணவர் போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்கில் வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. மேலும், மூன்று ஊழல் வழக்குகளில் அவருக்கு மற்றொரு நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதையும் படிங்க: சொல்ல முடியாத துயரம்!! சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்!! ஷேக் ஹசீனா ஆவேசம்!

இந்நிலையில், கடந்த 2024 டிசம்பர் மாதம் 'ஜாய் பங்களா பிரிகேட்' என்ற அமைப்பு நடத்திய ஆன்லைன் கூட்டத்தில் ஷேக் ஹசீனா பங்கேற்றார். இக்கூட்டத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசை கவிழ்க்கவும், உள்நாட்டுப் போரை தூண்டி மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்கவும் சதி திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, வங்கதேச குற்றப் புலனாய்வுத் துறை ஷேக் ஹசீனா உட்பட மொத்தம் 286 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்றம், ஜனவரி 21ஆம் தேதி குற்றச்சாட்டுகளை முறையாக பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இவ்வழக்கு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் நிலைமை இன்னும் பதற்றமாக உள்ள நிலையில், இத்தீர்ப்பு அந்நாட்டில் புதிய அரசியல் அலையை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!