நாட்டின் எரிசக்தி தேவைக்காக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், இனி வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி முடிவுகள் வணிக ரீதியான லாபம், நீண்ட கால தேவை மற்றும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. வெனிசுலா நீண்ட காலமாக இந்தியாவின் முக்கிய எரிசக்தி கூட்டாளியாக இருந்து வருகிறது. 2020 வரை கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்தது.”
அவர் மேலும் கூறியதாவது: “சர்வதேச தடைகள் காரணமாக 2023-ல் இறக்குமதி மீண்டும் தொடங்கியது. பின்னர் மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் விநியோகம் நின்றது. 2008 முதல் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் வெனிசுலா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இதையும் படிங்க: சொன்னதை செஞ்சுட்டாரு மோடி! ட்ரம்ப் கூட பேச மறுத்துட்டாரு!! புலம்பும் அமெரிக்க அமைச்சர்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வணிக சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு தயாராக உள்ளது.”
“நாட்டின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதே முதன்மை கடமை. அனைத்து கொள்முதல் முடிவுகளும் நாட்டின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படும். அரசியல் அழுத்தங்களுக்கு இடமில்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரியை குறைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதனால் இந்திய தயாரிப்புகள் இனி 18 சதவீத வரி விகிதத்தில் அமெரிக்க சந்தைக்குள் நுழையும். இது இந்திய ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும்; பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
ரஷ்யாவுக்கு மாற்றாக வெனிசுலாவை தேர்ந்தெடுப்பது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உத்தியில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துக்கு மத்தியில், பல்வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வது இந்தியாவின் நிலையான கொள்கையாக உள்ளது. வெனிசுலாவுடனான இந்த புதிய ஒப்பந்தம் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதோடு, வணிக ரீதியான நன்மைகளையும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐரோப்பாவை ஆட்டம் காண வைத்த 'லியோனார்டோ' புயல்..!! சிக்கித்தவிக்கும் மக்கள்..!!