வாஷிங்டன்: இந்திய விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்று கடந்த ஆண்டு உறுதியாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதன்படியே செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இழுபறியாகி தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம், பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேச மறுத்தது தான் என்று அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். இது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடந்த எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "இந்திய விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்களின் நலன்களில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம். இதற்காக தனிப்பட்ட முறையில் பெரிய விலை கொடுக்க நேரிடினும் நான் தயார்" என்று தெளிவாக கூறினார்.
இதையும் படிங்க: மோடியால் பாஜகவுக்கு ஆபத்து!! அவர் ஓய்வு பெறணும்!! பகீர் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி!
அமெரிக்கா இந்தியாவில் தனது வேளாண் பொருட்கள், குறிப்பாக பால் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி கோரியது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இதனால் அமெரிக்கா இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது. சமீபத்தில் இந்த வரியை மேலும் உயர்த்தும் மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்தது. ஒப்பந்தம் தயாராக இருந்த நிலையில், அதை இறுதி செய்ய பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேச வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக் 'ஆல்-இன்' பாட்காஸ்டில் அளித்த பேட்டியில், "ஒப்பந்தம் முழுமையாக தயாராக இருந்தது. ஆனால், மோடி டிரம்புடன் பேச வேண்டும் என்று கூறினோம்.
இந்தியா இதில் அசௌகரியம் கொண்டிருந்தது. எனவே மோடி பேசவில்லை. மூன்று வெள்ளிக்கிழமைகள் கால அவகாசம் கொடுத்தோம். ஆனால் அழைப்பு வரவில்லை" என்று கூறினார். இதனால் அமெரிக்கா வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்த போது, "ரயில் புறப்பட்டு விட்டது" என்று லுட்னிக் கூறியுள்ளார். இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாடு, விவசாயிகளின் நலனை முதன்மையாக வைத்ததே என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதிபர் டிரம்ப் தனது பாணியில் பேசி செயல்படுவதால், பல நாடுகள் அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் இந்தியா தனது நலன்களை காப்பாற்றிக் கொண்டது.
இந்த விவகாரம் இந்தியா - அமெரிக்கா உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்த பிரதமர் மோடியின் நிலைப்பாடு இந்தியாவில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு 500% வரி!? கொடூர மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்!? உச்சத்தில் வரி போர்!