பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்ததற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டபின் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக பிரதமர் மோடியை காட்டமாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ‘முதலில் ராஜ துரோகி, இப்போது ராம துரோகி’..! ராகுல் காந்தி மீது பாஜக பாய்ச்சல்..!
சுப்பிரமணியன் சுவாமி அப்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட செய்தியில் “ பிரதமர் மோடி எதையும் செய்யமாட்டார். பீகாரில் சென்று பேசுவதற்குப் பதிலாக காஷ்மீருக்கு சென்று பார்வையிட்டிருக்கலாம். நாம்தான் நம்பிக்கையை இழந்து வீட்டுக்குப் போகப்போகிறோம். மேட்டர் முடிந்தது. மோடி சொல்லுவார் , நிம்மதியாகத் தூங்கலாம்” என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் அமைப்பான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகியோரின் முகாம்கள், உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.
இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் பல தீவிரவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம், குறைந்தபட்சம் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவத்தின் அபாரமான நடவடிக்கையைக் கேள்விப்பட்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியுள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பாகிஸ்தான், ஆக்கிமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் நல்ல நடவடிக்கை. இந்திய அரசு மேலும் முன்னேறிச் சென்று, பலூசிஸ்தான், சிந்து, கபார் ஆகிய மாநிலங்களைக் கைப்பற்ற வேண்டும். மேற்கு பஞ்சாபுக்கு தலைநகராக இருக்கும் லூகூர், மேற்கு பஞ்சாப்பை வசப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 50 கி.மீ சுற்றளவில் தொடரும் கொலைகள்.. ஒரே பாணியில் நடப்பது எப்படி? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி..!