தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக மற்றும் தவெக உடனான கூட்டணி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் அதிரடியாகப் பதிலளித்தார்.
அதிமுக போட்டியிட விரும்பும் அதே தொகுதிகளை பாஜகவும் விருப்பப்பட்டு கேட்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்துக் கேட்டபோது, அதிமுக விரும்பும் தொகுதிகளை பாஜகவும் விருப்பப்பட்டு கேட்பதில் எவ்விதத் தவறும் இல்லையே! வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்பது ஒரு கட்சியின் உரிமை என அவர் குறிப்பிட்டார்.
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்னும் இரண்டு தினங்களில் (மார்ச் 21) சென்னை வர உள்ளார். அவர் வந்த பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இடங்கள் இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நில அபகரிப்பு வழக்கு! மே 11-ல் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் சம்மன்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு, இதனை நான் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன். இது போன்ற வதந்திகள் குறித்துத் தவெக தரப்பில்தான் நீங்கள் கேட்க வேண்டும் எனத் தெரிவித்து அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எடப்பாடி பழனிசாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, தற்போது நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு கூட்டணி ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை உணர்த்துகிறது.
கடந்த 2021 தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு இணையான இடங்களை (சுமார் 25-30) ஒதுக்க வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுத்து வருவதால், சில குறிப்பிட்ட தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வதில் அதிமுக-பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!