தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள மத்தியப் பிரதேச மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பாஜக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த எல். முருகன், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் மத்திய அமைச்சர் பதவியையும் அண்மையில் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள அந்த ஒரு மாநிலங்களவை இடத்திற்கு வரும் நவம்பர் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நவம்பர் 2 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல். முருகனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாஜக சார்பில் இந்த இடத்தில் யார் போட்டியிடுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இது தொடர்பாக அக்டோபர் 26 அன்று மத்தியப் பிரதேச பாஜக மையக்குழுக் கூட்டம் கூடி, மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தகுதியான 4 முதல் 5 தலைவர்களின் பெயர்களைப் பரிசீலித்து கட்சியின் தேசியத் தலைமைக்கு அனுப்பி வைத்தது.
இதையும் படிங்க: ஜனநாயகத்தை பாதுகாக்க... ஐதராபாத்தில் அமித் ஷா தலைமையில் பாஜக பிரம்மாண்ட பேரணி..!!

இறுதியில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராகக் களமிறக்க பாஜக மேலிடம் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஹர்தீப் சிங் பூரியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 25-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரை மத்தியப் பிரதேசத்திலிருந்து மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்ய பாஜக மேலிடம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் பாஜகவிற்குப் பெரும்பான்மை பலம் உள்ளதால், ஹர்தீப் சிங் பூரி போட்டியின்றி அல்லது எளிதில் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: தனுஷின் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!