பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13.5 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தைப் பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நடிகர் தனுஷின் பின்னால் பாஜக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும், தவெக அரசு தனுஷைப் பார்த்துக் கலக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்ட ₹3.7 கோடி மதிப்புள்ள தங்கக் கவசம் முறைப்படி பெறப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, ஆர்.பி. உதயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் மற்றும் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுப் பெற்றுக் கொண்டனர். துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு செல்லப்படும் இத்தங்கக் கவசம், பூஜைகள் நிறைவடைந்த பின்னர் நவம்பர் 1-ஆம் தேதி மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படவுள்ளது.

நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் லஞ்சம் ஆகியவை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அதிமுக 31 ஆண்டுகளும், திமுக 25 ஆண்டுகளும் சிறப்பான ஆட்சியைத் தந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார். பருவமழை பாதிப்புகளைக் களத்தில் சென்று கவனிக்காமல், தொலைக்காட்சியையும் நாளிதழ்களையும் பார்த்து மட்டுமே அரசு தெரிந்து கொள்வதாக அவர் சாடினார்.
இதையும் படிங்க: தனுஷ் அரசியல் வருகையால் மாறுமா வாக்கு கணக்கு? தவெகவில் பரபரப்புக்கு என்ன காரணம்?
தொடர்ந்து நடிகர் தனுஷ் சந்திப்பு குறித்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்த அவர், "நடிகர் தனுஷைப் பார்த்து ஆளும் கட்சியினர் அநாவசியமாகப் பதற்றமடைகின்றனர். நடிகர் விஜய்யிடம் ஆட்சியைத் தந்துவிட்ட மக்கள், அடுத்து நடிகர் தனுஷிடம் தந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்கள் நடுங்குகிறார்கள். தனுஷின் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கட்சி பாஜக; அக்கட்சித் தலைவர்களை தனுஷ் சந்திப்பதில் எவ்விதப் பிழையும் இல்லை. நாங்களும் அந்தக் கூட்டணியில் தான் உள்ளோம்" என்றார்.
மேலும், அதிமுகவை விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமாருக்குப் பதிலடி கொடுத்த அவர், அதிமுக என்பது மாபெரும் மக்கள் சக்தி என்றும், இடைத்தேர்தலில் தனித்து நின்று தனது வாக்கு வங்கியை நிரூபித்துள்ளது என்றும் தெரிவித்தார். அதிமுக என்ற விரைவு ரயில் தங்குதடையின்றிச் சென்று கொண்டிருக்கிறது என்றும், அதில் ஏறுபவர்கள் தாராளமாகப் பயணிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ரஜினி ஆதரவு இல்லாமல் விஜயை எதிர்க்க முடியாது! அரசியலில் தனுஷுக்கு பாஜக தலைவர்கள் அட்வைஸ்?