கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லம், ஆளுநர் ஆர்.என். ரவி அலுவலகம், நடிகர் விஜய், ரஜினிகாந்த் வீடுகள், ஊடக நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இத்தகைய அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் புரளி எனத் தெரியவந்துள்ளது. போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 3ம் தேதி அன்று அதிகாலை 4.10 மணிக்கு, தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தது. அதில், முதல்வர் ஸ்டாலினின் சென்னை இல்லம், ராஜ்பவன், நடிகை திரிஷா இல்லம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை செய்து வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என உறுதி செய்தனர். இதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் நீலாங்கரை இல்லம், மதுரை விமான நிலையம், இன்போசிஸ் ஐ.டி. நிறுவனம், ரஜினிகாந்த் வீடு, புதிய தலைமுறை டிவி அலுவலகம், பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) அலுவலகத்திற்கும் மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால் இறுதியில் அவை அனைத்தும் புரளி எனத் தெரியவந்தது.
இதையும் படிங்க: இன்று IT நிறுவனங்கள் டார்கெட்..!! தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் அலறும் சென்னை..!!
இந்நிலையில் சென்னையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், மிரட்டல் மோசடி என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல்களின்படி, இன்று சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தூதரகங்களின் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரிகள் தூதரக அலுவலகங்களுக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடர் சம்பவங்களால் நகரின் பாதுகாப்பு அமைப்புகள் அதிக அளவில் எச்சரிக்கையாக உள்ளன. சைபர் கிரைம் போலீஸ், மின்னஞ்சல்களின் ஐபி முகவரிகளைத் தடமாற்றி, குற்றவாளிகளைத் தேடி வருகிறது. வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துவதாகவும், ஆனால் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளன. இந்த மிரட்டல்கள் பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து போலீஸ் ஆழமான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சென்னை காவல்துறை, பொது மக்களிடம் இருந்து சந்தேகத்திற்குரிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகரின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாக இருந்தால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி.. ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்..!!