தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சுற்றி அரசியல் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்பை மத்திய அரசு மேலும் பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட பாதுகாப்பு, டெல்லி இல்லம் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சிகள் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தர் மற்றும் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல்? ராகுல் காந்தி, பிரியங்கா மீது 3 பாய்ந்தது வழக்கு! டெல்லியில் பரபரப்பு!
இந்த சூழலில், ஞானேஷ் குமார் வசிக்கும் டெல்லி இல்லத்தைச் சுற்றியும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது குடும்பத்துடன் தொடர்புடைய ஆக்ரா இல்லம் அருகிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதால், அங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைய தலைமையகமான நிர்வாசன் சதன் பகுதியிலும் கூடுதல் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையரின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவிலும் கூடுதல் பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சமீபத்திய போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து அரசியல் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவது தொடர்பாக டெல்லி போலீசார் அனுமதி மற்றும் கூட்டக் கட்டுப்பாடுகள் குறித்து ஏற்கனவே விதிமுறைகளை அறிவித்துள்ளனர்.
SIR விவகாரம் தொடர்பான அரசியல் மோதல் நீடித்து வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!