சைபர் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட சஞ்சார் சாத்தி செயலி இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த செயலி மூலம், நீங்கள் வாங்கிய தொலைபேசிகள் அசல் அல்லது போலியானதா என்பதைக் கண்டறியலாம். ஸ்பேம் அழைப்புகள் குறித்தும் புகார் அளிக்கலாம். உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்து, தேவையற்ற மற்றும் பயன்படுத்தப்படாத எண்களைத் தடுக்குமாறு கோரலாம். இதுபோன்ற பல்வேறு நன்மைகள் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டது.
இருப்பினும், அனைத்து தொலைபேசிகளிலும் சஞ்சார் சாத்தி செயலி முன்கூட்டியே நீக்கப்படாத வகையில் நிறுவப்பட வேண்டும் ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக சமீபத்திய செய்திகள் வந்துள்ளன. நேற்றிரவு இதுகுறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று போன்களில் எந்த செயலியை நிறுவலாம் என்பது பயனாளிகளின் உரிமை என்றும், சஞ்சார் சாத்தி செயலி நீக்கப்படாத வகையில் போனில் நிறுவப்படலாம் என்பது கவலைக்குரியது என்றும் பொதுமக்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் விவாதமாக வெடித்தது.
பின்வாங்கிய மத்திய அரசு:
சஞ்சார் சாத்தி செயலியை இயல்புநிலை செயலியாக மாற்றும் முடிவை செயல்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 120 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவுகளை பிறப்பித்தது. இருப்பினும், மையம் 24 மணி நேரத்திற்குள் இந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: "Sanchar saathi" செயலிக்கு கிளம்பிய எதிர்ப்பு..!! திடீர் ட்விஸ்ட் அடித்த மத்திய அரசு..!!
மத்திய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு:
இந்த பிரச்சினைக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்துள்ளார். நீங்கள் சஞ்சார் சாத்தி செயலியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை டெலிட் செய்து கொள்ளலாம் என பயனர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். மற்ற செயலிகளைப் போலவே, இந்த செயலியையும் நீக்கலாம் எனக்கூறியுள்ளார். சைபர் மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சஞ்சார் சாத்தி செயலி உள்ளது என்பது பலருக்குத் தெரியாது என்றும், இந்தத் தகவலை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். இந்தச் செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சஞ்சார் சாத்தி செயலியின் நன்மைகள்:
இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு சஞ்சார் சாத்தி செயலியை அறிமுகப்படுத்தியது. இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைந்து போன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 3.7 லட்சம் தொலைபேசிகள் முடக்கப்பட்டுள்ளன.
- சஞ்சார் சாத்தி செயலி மூலம் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்கலாம்.
- உங்களது தொலைபேசி தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ சஞ்சார் சாத்தி போர்டல் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த வலைத்தளம் மற்றும் செயலி மூலம் உங்கள் தொலைபேசியை மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க நீங்கள் கோரலாம்.
- புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் வாங்கும் சந்தர்ப்பங்களில், அந்த சாதனம் அசலானதா? அல்லது போலியானதா? என்பதை அறிய சஞ்சார் சாதி வலைத்தளம் மற்றும் ஆப் பயன்படும்.
- உங்கள் பெயரில் எத்தனை தொலைபேசி எண்கள் உள்ளன என்பதை அறிய இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த தளத்திலிருந்து நேரடியாக பயன்படுத்தப்படாத மற்றும் தொடர்பில்லாத எண்களைத் தடுக்க நீங்கள் கோரலாம்.
இதையும் படிங்க: இனி செல்போன்களில் இந்த APP கட்டாயம் இருக்கனும்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!