2026-27 கல்வியாண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 3 ஆம் வகுப்பு முதல் AI-ஐ கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொழில்நுட்பத்துடன் கூடிய எதிர்காலத்திற்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக, ஒரு கோடி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. AI காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் வேலையிழப்புகள் ஏற்படும் என்றாலும், சரியான அமைப்பை நடைமுறைப்படுத்தினால் 80 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகக்கூடும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இன்றைய ஆன்லைன் யுகம் முழுவதுமே ஏஐ வசம் திரும்பியுள்ளது. வரும் நாட்களில் மனிதர்களை விட ஏஐ அதிக வேலை வாய்ப்புகளை பெறக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த சூழலில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலும், வாய்ப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் வகையிலும் மத்திய அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, எதிர்காலம் முழுவதும் தொழில்நுட்பத்தால் நிறைந்திருப்பதால், மாணவர்களை தயார்படுத்த மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் இருந்து, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் 3 ஆம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) கட்டாயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அனைத்து வகுப்புகளிலும் AI ஐ ஒருங்கிணைக்க ஒரு புதிய பாடத்திட்டத்தை தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க: அடுத்த ஆண்டு முதல் 3 முறை.. ஆசிரியர்களுக்கு அதிரடி அறிவிப்பு.. உச்சநீதிமன்றத்திடம் சரண்டர் ஆன தமிழ்நாடு அரசு...!
இந்த புதிய முடிவை செயல்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்விச் செயலாளர் சஞ்சய் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சியை வழங்குவது பெரிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களும் ஆசிரியர்களும் வேகமாக முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது, 6 ஆம் வகுப்பு முதல் 18,000க்கும் மேற்பட்ட CBSE பள்ளிகளில் AI ஒரு திறன் பாடமாக வழங்கப்படுகிறது. இது 15 மணி நேர தொகுதியைக் கொண்டுள்ளது. இது 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விருப்பத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, 9-10 ஆம் வகுப்புகளில் 15,000 மாணவர்கள் AI-ஐத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் இந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை 7.9 லட்சமாக அதிகரித்துள்ளது.
2030க்குள் 8 மில்லியன் வேலைகள்:
தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் வேலைகளின் தன்மையை மாற்றும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரியான உத்தியுடன் நாம் முன்னேறவில்லை என்றால், 2030-க்குள் நாட்டில் ஐடி ஊழியர்களின் எண்ணிக்கை 75 லட்சத்திலிருந்து 60 லட்சமாகக் குறையும் என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 20 லட்சம் பாரம்பரிய வேலைகள் மறைந்துவிடும் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், சரியான அமைப்பை உருவாக்க முடிந்தால், 80 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போகப் போறீங்களா? - கோவை மக்களை எச்சரித்த காவல்துறை...!