தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர், 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகமாவதற்கு முன், நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள்.
ஆனால், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்பின்னர் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1-ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.76 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க: ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போகப் போறீங்களா? - கோவை மக்களை எச்சரித்த காவல்துறை...!
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது.
4 மாதங்களுக்கு ஒன்று வீதம் ஆண்டுக்கு 3 முறை சிறப்பு டெட் நடத்தினால் பாதிப்பில் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறுவர் என்றும், ஆசிரியர்களுக்கு தகுதிவாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு வாரஇறுதி நாள்களில் பணியிடை பயிற்சி வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டில் நடைபெறும் டெட் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மீதமுள்ள தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027-ம் ஆண்டில் தேவைக்கேற்ப டெட் நடத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு டெட் தேர்வெழுதவுள்ள ஆசிரியர்களுக்கு எஸ்சிஇஆர்டி பயிற்றுநர்களை கொண்டு மாவட்டந்தோறும் இணைய வழியில் சிறப்பு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘அம்மா குடிநீர்’ அவ்வளவு தானா? - விரைவில் வருகிறது ‘அப்பா குடிநீர்’... அதிர்ச்சியில் அதிமுக...!