சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 7ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சென்னையில் அதிகரித்து வரக்கூடிய நாய்க்கடி சம்பவங்களை தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. நவம்பர் 24ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும் பொழுது அவற்றுக்கு வாய் கவசம் போட வேண்டும், கழுத்து கயிறு இல்லாமல் வெளியே அழைத்து செல்லக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
பதிவு செய்யப்படாமல் பிராணிகளை வைத்திருந்தால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், முகக்கவசம் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி இந்த உத்தரவுகளை எதிர்த்து இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி லட்சுமி நாராயணனின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது நாய்களுக்கு வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம் இல்லை என்ற போதும், அவற்றுக்கு கழுத்து கயிறு கட்டாமல் அழைத்துச் செல்லக்கூடாது என்பது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "வட சென்னை தாதா நாகேந்திரன் சாகவில்லை"... ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...!
மேலும் 82,000 பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு ஒரு முறை மட்டுமே மைக்ரோசிப் பொறுத்தினால் போதுமானது என்றும் வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகள் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் ஏழாம் தேதி வரை நீடித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவித்துள்ளது. மனுதாரர் தரப்பில் நான்கு பிராணிகள் பதிவு செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டுவிட்டதாகவும், நான்கு பிராணிகளுக்கு மேல் பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்றும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். அதே சமயம் நீதிமன்றத்தில் தெரிவித்த இந்த விளக்கத்தை ஒரு வாரத்தில் அறிவிப்பு ஆணையாக வெளியிட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை..!! சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..??