ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கை தொடர்கிறது. பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லைப் பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இரு இடங்களில் நடந்த என்கவுன்டரில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் இன்னும் சில நக்சலைட்டுகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
இந்த ஆண்டு (2026) இதுவரை சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டர்களில் 285 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், படையினரின் தீவிர நடவடிக்கையால் நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் சரணடையும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: அமைதிக்கு திரும்பும் சத்தீஸ்கர்!! 33 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட 10 நக்சல்கள் சரண்!

மத்திய உள்துறை அமைச்சர் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளார். இதன் காரணமாக நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
நக்சலிசம் ஒழிப்பு நடவடிக்கையால் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும், அரசு தரப்பில் நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டுவருவதே இலக்கு என்று உறுதியாக கூறப்படுகிறது.
இந்த என்கவுன்டர் சத்தீஸ்கரில் நக்சலிச எதிர்ப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிராய்லர் சிக்கன் விலை உயர வாய்ப்பு? உற்பத்தியை நிறுத்திய கோழி பண்ணையாளர்கள்!!