ராய்ப்பூர், டிசம்பர் 13: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், தலையில் மொத்தம் 33 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த 10 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரணடைந்தனர். இவர்களில் ஆறு பெண்களும் அடங்குவர்.
பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய இவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். சமீப காலமாக நக்சலைட்டுகள் சரணடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர், தெலங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நக்சல் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதை ஒடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: ரூ.77 லட்சம் வெகுமதி!! நாடு முழுவதும் தேடப்பட்ட நக்சல் தலைவன் சரண்!!
2026 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் நக்சல் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சரணடைவோருக்கு மறுவாழ்வு திட்டங்கள், பரிசுத்தொகை அறிவிப்பு உள்ளிட்ட ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.
சுக்மா மாவட்டத்தில் சரணடைந்த 10 நக்சலைட்டுகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு மொத்தம் 33 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து, போலீசார் முன்பு சரணடைந்தனர். இது பஸ்தார் பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
கடந்த 11 மாதங்களில் மட்டும் பஸ்தார் பகுதியில் 1,514 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளில் சத்தீஸ்கரில் மட்டும் 2,400க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். சமீப காலமாக சரணடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்தனர். அரசின் மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக நக்சலைட்டுகள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக, நக்சல் இயக்கத்தின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மார்ச் 2026க்குள் 'நக்சல் முடிவு' நிச்சயம்! மோடி-ஷா இலக்கு! ரூ.89 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 11 பேர் சரண்!